சென்னை

சென்னை அம்பத்தூரில் காணாமல் போன 3 வயது ஆண் குழந்தை கடத்தல்காரர்களிடம் இருந்து  நாக்பூரில் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள பட்டரவாக்கம் பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதிலேஷ் தனது மனைவி மீராதேவியுடன் வசித்து வருகிறார்.  இவர்களுக்கு விஷ்ணு (வயது 5) மற்றும் ஷ்யாம் (வயது 3) என இரு மகன்கள் உள்ளனர். மிதிலேஷும் மீரா தேவியும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர்.

இவர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் போது பக்கத்து வீட்டில் குழந்தைகளை விட்டு விட்டுச் செல்வார்கள்  நேற்று முன் தினம் அவர்கள் வேலையில் இருந்து திரும்பிய போது 3 வயது மகன் ஷ்யாமை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையொட்டி பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மிதிலேஷ் வீட்டு மாடியில் வசிக்கும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஷிவ்குமார் நோரியா மற்றும் கபரிதாஸ் ஆகியோர் திடீரென்று உடைமைகளுடன்  காணாமல் போனது விசாரணையில் தெரிய வந்துள்ளது.   அந்த பகுதியில் சிலர் அவர்கள் ஷ்யாமை அழைத்துச் சென்றதாகத் தெரிவித்ததை அடுத்து அவர்களின் மொபைல் எண்ணை டவர் மூலம் காவல்துறையினர் டிரேஸ் செய்தனர்.

அதில் அவர்கள் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை நோக்கி செல்வது தெரியவந்தது.   செண்டிரல் ரயில் நிலையத்தில் விவரங்கள் சேகரித்த போது இருவரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வது உறுதி ஆனது.   தனிப்படையினர் நாக்பூர் காவல்துறையினரின் உதவியுடன் அவர்களைப் பிடிக்க முயன்றனர்.  நாக்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் இருவரையும் பிடித்தனர்.

அவர்கள் வைத்திருந்த குழந்தை ஷ்யாமை மீட்டு அங்கிருந்த ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அம்பத்தூரில் இருந்து துணை ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை நாக்ப்ப்புர் சென்று குழந்தையை மீட்டுள்ளனர்.  குழந்தையைக் கடத்தியவர்களைச் சென்னை அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர்.  புகார் அளித்த 4 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்த தனிப்படையை காவல்துறை ஆணையர் பாராட்டி உள்ளார்.