சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைமை முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை  வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடைபெறாத மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  தற்போது வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 9  மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை, மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ளார்.

அதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.