சென்னை: தமிழ்நாட்டில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணி தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு சென்னையில் நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சென்னையில் மழைகாலத்தின்போது நீர் தேங்காவாறு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநிர் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள்  நடைபெறுவதால், பல சாலைகள் முடக்கப்பட்டும், ஒருவழிப் பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதற்கிடையில் மழைநீர் வடிகால் பணிகள் இந்த மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்னும் முழுமையாக பணிகள் முடிவடையவில்லை. இந்த நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆய்வு செய்து வருகிறார்.

இன்று தாம்பரம் மாநகராட்சியின் பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.