சென்னை: தனது சிறப்பான பணியை பொதுமக்கள் பாராட்டும்போது தோனியை நினைத்துக்கொண்டேன் என சிஎஸ்கே பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 2021 தொடரின் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. அப்போது, 4வது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சிஎஸ்கே அணி உரிமையாளரும், முதல்வரை சந்தித்து பேசி பாராட்டு விழாவுக்கான தேதி குறித்தார். அதன்படி சிஎஸ்கே வெற்றி விழா இன்று மாலைசென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சி.எஸ்.கே கேப்டன் தோனி வெற்றிக் கோப்பையை முதல்வர் மு.கஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். பின்னர், முதல்வரின் பெயரும் 7 என்ற எண்ணும் பொறிக்கப்பட்ட ஜெர்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னை அணிக்கான பாராட்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை என்றாலே சூப்பர்தான். முதல்வராக அல்ல, தோனியின் ரசிகராக பாராட்டு விழாவிற்கு வந்திருக்கிறேன். எனது குடும்பமே தோனியின் ரசிகர்தான். எனது மகன்,பேரன் பேத்திகள் என அனைவருமே தோனியின் ரசிகர்கள்தான். எனது தந்தை முத்தமிழறிஞர் கலைஞரும் தோனியின் ரசிகர்.
“ஆட்சிக்கு வந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும்போது என்னை, “தினமும் சிக்ஸர் அடிக்கிறார்” எனப் பாராட்டினார்கள். அப்போதெல்லாம் தோனியை நினைத்துக்கொண்டேன்”.
அவர் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்டை என்னால் மறக்க முடியவில்லை. தோனி தலைசிறந்த ஃபினிஷர், விக்கெட் கீப்பர் என சொல்வதை விட சிறந்த கேப்டன் என்று சொல்லலாம். ஒரு அணியை உருவாக்கியவர்தான் தலைசிறந்த ஆளுமையாக போற்றப்படுவார் என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தாலும் என்னுடைய மனது மழை நிவாரண பணிகளையே சிந்திக்கிறது. கோட்டையில் இருந்தாலும் குடிசையை நினைக்க வேண்டும் என முத்தமிழறிஞர் கலைஞர் கூறுவார். அதே மனநிலையில்தான் இந்த மேடையில் நான் இருக்கிறேன். நீங்கள் உங்கள் விளையாட்டை தொடருங்கள், நாங்கள் மக்கள் பணியைத் தொடருகிறோம். நீங்கள் சி.எஸ்.கே அணியை நீண்ட காலம் வழிநடத்த வேண்டுகிறோம்.”
நெருக்கடியான காலத்தில் சிறிது நேரம் இளைப்பாறலாம் என்றே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். நானும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன். சென்னை மேயராக இருந்த போது காட்சி போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கபில் தேவுக்கு பிறகு இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்றுத் தந்தது டோனி.டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் என்றால் டோனிதான்.
எப்போதுமே இலக்குதான் முக்கியம். அதை அடைய உழைப்பு தான் முக்கியம். இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்த முடியாது. அது அரசியலுக்கும் பொருந்தும். நீங்கள் உங்கள் விளையாட்டை தொடருங்கள், நாங்கள் எங்கள் மக்கள் பணியை தொடர்கிறோம். இன்னும் பல தொடர்களுக்கு சென்னை அணியின் கேப்டனாக டோனி நீடிக்க வேண்டும்”.
இவ்வாறு கூறினார்.