சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, திமுக தலைவரும், தமிழ்நாட்டில், இந்தியா கூட்டணியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரபல தமிழ்நாளிதழ் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியா’ கூட்டணிதான் நாட்டின் பிரதமர் வேட்பாளர், கச்சத்தீவு விவகாரம், தேர்தல் பத்திரம் மற்றும் மார்ட்டின் விவகாரம், காவிரி, மேகதாது அணை பிரச்சினை, வாரிசு அரசியல் உள்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
மக்களிடையே, திமுக தலைமையிலான தமிழக அரசின் மீது எந்த அதிருப்தியும் நிலவவில்லை எனக் கூறிய மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணிதான் பிரதமர் வேட்பாளர் என்றும் கூறி உள்ளார்.
அரசின் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் பயனாளிகளுக்குச் சென்றடைந்துள்ளதாகக் கூறுகிறார். நிதிநிலை சீரானதும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் மீதமுள்ளவை யும் நிறைவேற்றப்படும் என்றும், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதாக அந்தக் கட்சியினர் தெரிவிப்பதை ஏற்க முடியாது என்றும் உறுதியளித்தார்.
மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களின் மனநிலை எப்படி உள்ளது?
மக்களிடம் எழுச்சிமிக்க ஆதரவு தெரிகிறது. திமுக மீதும், இந்தியா கூட்டணியின் மீதும் மக்களிடம் பெரும் நம்பிக்கை இருக்கிறது. அவர்களிடம் பேசும்போது உற்சாகத்தைக் காண்கிறேன். பத்தாண்டு பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதை எனது பிரசாரத்தின்போது மக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை மக்களவைத் தேர்தல் களம் காட்டுகிறது. தமிழ்நாட்டில் “இந்தியா’ கூட்டணியின் முகமாக திமுக இருக்கிறது. பாஜகவை எதிர்த்து தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறீர்கள்.
மாநிலத்தில் பாஜக எதிர்ப்பு எந்த அளவுக்கு கூட்டணியின் நலனுக்கு உதவும் என்று நினைக்கிறீர்கள்?
வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடித்தளத்தை பாஜக சிதைக்கப் பார்க்கிறது. அரசியல் லாபங்களுக்காக நாட்டின் அமைதியைக் குலைக்கப் பார்க்கிறது. தமிழ்நாடு சமூக நல்லிணக்கத்தைக் காக்கும் மண். இங்கு மதவெறி அரசியல் எனும் நெருப்பு மூட்டிக் குளிர்காய நினைக்கும் பாஜகவுக்கு எதிரான மனநிலையே உள்ளது. நாட்டை மீண்டும் மதநல்லிணக்க அரசியலுக்கான நிலமாக மாற்றும் முயற்சியை “இந்தியா’ கூட்டணி தொடங்கியுள்ளது. அதற்கான பங்களிப்பை திமுக செய்து வருகிறது. புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான “இந்தியா’ கூட்டணி வெல்லும்
டெல்லி, ஜார்க்கண்ட் மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கருதுகிறீர்களா?
மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்ட நேரமும் விதமும் பாஜகவின் தோல்வி பயத்தைக் காட்டுவதாகவே உள்ளது. ஊழல் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு பாஜகவுக்கு எதிரான தலைவர்களை மட்டும் பழிவாங்கும் மத்திய பாஜக அரசுதான், ஊழலை சட்டபூர்வமாக செய்த அரசு என்பதைத் தேர்தல் பத்திரங்கள் விவகாரமும், சி.ஏ.ஜி.யின் ஏழரை லட்சம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான அறிக்கையும் அம்பலப்படுத்திவிட்டன.
தவறு செய்தவர்களும், ஊழலில் ஈடுபடுபவர்களும் சட்டத்தை எதிர்கொள்ளத்தானே வேண்டும்?
ஈ.டி. எனப்படும் அமலாக்கத் துறை பிரதமர் மோடியின் ஈ.டி. என்று பொதுமக்களே பேசக்கூடிய அளவுக்கு மாறிவிட்டது. மத்தியிலுள்ள விசாரணை அமைப்புகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவதை அனைவரும் அறிவர்.
பாஜகவை எதிர்க்கின்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு, கைது, சிறை, சோதனை என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாஜகவுக்கு தாவிவிட்டால் அவர்கள் மீதான வழக்குகள் ஓரம்கட்டப்பட்டு தூய்மையானவர்களாகச் சித்தரித்துத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், அமைச்சரவையில் இடமும் கொடுப்பது அப்பட்டமாக நடந்து வருகிறது.
யார் பிரதமர் என்று அறிவிக்காமல் “இந்தியா’ கூட்டணி மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறது. அது பலவீனமாகத் தெரியவில்லையா?
இப்போது நடைபெறுவது, யார் பிரதமராக வர வேண்டும் என்பதைவிட, யார் பிரதமராக தொடரக் கூடாது என்பதற்கான தேர்தல். இது ஒரு ஜனநாயக மீட்புப் போராட்டம். இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போர். அந்த வகையில் “இந்தியா’ கூட்டணிதான், இந்தியாவின் பிரதமர் முகம்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றன. அதில் உங்கள் கருத்து என்ன?
இந்தியத் தேர்தல் ஆணையம் தன் மீது விமர்சனங்கள் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, தேர்தல் ஆணையர் ஒருவர் பதவி விலகியதும், இரண்டு பேர் புதிதாக நியமிக்கப்பட்டதும் அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு இடமளித்தன. தேர்தல் தேதி அறிவிப்பு, கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு ஆகியவற்றில் பாரபட்சமான அணுகுமுறை வெளிப்பட்டது ஜனநாயகத்துக்கு உகந்தது இல்லை. இப்போதும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்து களத்தை எதிர்கொள்கிறோம். அந்த நம்பிக்கையை ஆணையம் காப்பாற்றும் என நம்புகிறேன்
தமிழ்நாட்டில் பல்வேறு நலத் திட்டங்களை திமுக தலைமையிலான அரசு செய்தாலும், ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
எதிர்க்கட்சிகளால் திமுக அரசை குறை சொல்ல முடியவில்லை. எங்களுடைய திட்டங்கள் உரிய முறையில் பயனாளிகளுக்குச் சென்று சேர்ந்துள்ளன. இதை அரசும் உறுதி செய்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெறாத பல புதிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் பலவற்றைச் செயல்படுத்தி யுள்ளோம். மீதமுள்ள ஒருசிலவற்றை நிதி நிலைமை சீரானதும் நிறைவேற்றுவோம். ஒரு சில தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் இருப்பது பலவீனமல்லவா? இந்தத் தாமதத்துக்குக் காரணம், கடந்த அதிமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள்தான். அத்துடன், தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை வழங்காமல் மத்திய பாஜக அரசும் வஞ்சிக்கிறது. மறைமுகக் கூட்டணி வைத்திருக்கும் இருவரும் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவுவதாகச் சொல்வது, மல்லாந்து படுத்து எச்சில் துப்புவது போன்றது.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக பாஜக வளர்ந்துவிட்டதா? அண்ணாமலை சொல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ்நாட்டின் அரசியல் சூழலைப் பற்றி பாஜக இதுவரை புரிந்து கொள்ளவில்லை. மத்தியில் ஆட்சியில் இருப்பதாலும் ஊடக பிரசார பலத்தாலும் தங்களது இருப்பைக் காட்ட முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கான பதிலை வரும் வாக்குப் பதிவு தினத்தன்று (ஏப்.19) மக்கள் வழங்குவார்கள்.
வாரிசு அரசியல், ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளை திமுக மீது பாஜக தொடர்ந்து முன்வைக்கிறது. இது மக்கள் மத்தியில் எடுபடுமா?
திமுக குடும்பக் கட்சி என்ற விமர்சனத்துக்கு, ஆமாம் இது குடும்பக் கட்சிதான். தமிழ்நாட்டு மக்களைக் குடும்பமாகக் கருதி ஆட்சி நடத்துகிற கட்சி. அனைத்துக் குடும்பங் களுக்கும் நன்மை செய்யும் கட்சி. குடும்ப உறுப்பினர் என்பதற்காக தேர்தலைச் சந்திக்காமல் யாரும் பதவிக்கு வந்துவிட முடியாது. திமுகவில் அதிக அளவில் வாரிசுகளுக்கு முன்னுரிமை தரப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு குறித்து… மக்களவைத் தேர்தலில் பல மாநிலங்களிலும் பாஜக அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் பல வாரிசுகள் இடம்பெற்றிருப்பதை அந்தக் கட்சியின் தலைவர்கள் வசதியாக மறந்துவிட்டு, எங்களை விமர்சனம் செய்கிறார்கள். அதுபோன்று ஊழல் என்று பாஜக விமர்சிப்பதும் நகைப்புக்குரியது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்ததால் மக்கள் அதை விரட்டியடித்தனர். பாஜகவின் ரூ.7.5 லட்சம் கோடி ஊழலை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியபோது, பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்று இரண்டு முறை பதவியை இழந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஊழல் பற்றிப் பேச வேண்டுமெனில் பிரதமர் மோடி இதைத்தான் பேச வேண்டும். பாஜகவுடன் அதிமுக மறைமுக உறவு வைத்துள்ளதாக நீங்கள் குற்றஞ்சாட்டுகிறீர்கள்.
இதே குற்றச்சாட்டை உங்கள் (திமுக) மீது அதிமுக முன்வைக்கிறது. தமிழக தேர்தல் களத்தில் எந்த இரு கட்சிகளுக்கு இடையே உண்மையான போட்டி?
மத்திய பாஜக அரசின் அனைத்து மக்கள் விரோத மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகளுக்கு துணைபோனது அதிமுக. தனது பதவியை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றிக் கொள்ள, பாஜக அரசின் அத்தனை துரோகங்களுக்கும் துணைபோனார். இரண்டு கட்சிகளும் சேர்ந்திருந்தால் படுதோல்வி அடையும் என்பதால் தனித்தனியாக நிற்கின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒன்றுசேர்ந்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு பேசிக் கொண்டுதான் இரண்டு அணிகளாக நிற்கிறார்கள். இரண்டுமே மக்கள் விரோத அணிகள்தான். அதில், அதிமுகதான் தேர்தல் களத்தில் திமுகவுக்குப் போட்டியாக உள்ளது. சித்தாந்த ரீதியாக திமுக கூட்டணிக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பாஜக எதிரியாக உள்ளது.
1999-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நிலைத்திட திமுக முக்கியப் பங்கு வகித்தது. குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த சம்பவத்துக்கு திமுக மேலும் உறுதியான முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. குறுகிய கால அரசியல் லாபங்களை முன்னிறுத்தி இதைச் செய்யவில்லை என்ற கூற்று குறித்து உங்கள் கருத்து என்ன?
பாஜகவின் மதவாத அரசியல் கொள்கையை திமுக எப்போதும் உறுதியாக எதிர்த்தே வந்திருக்கிறது. நாட்டில் ஒரு நிலையான அரசு அமைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான், வாஜ்பாய் தலைமையிலான கூட்டணியில் திமுக அங்கம் வகித்தது. ஆனாலும், குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில்தான் செயல்பட்டோம். அந்தச் செயல்திட்டத்தில் பாஜகவின் மதவாத அரசியல் திட்டங்களுக்கு இடமளிக்காமல் கடிவாளம் போட்டவர்களில் முதன்மையானவர் கருணாநிதி.
குஜராத் கலவரம் குறித்து திமுக அமைதி காத்தது ஏன்?
பாஜக ஆட்சி செய்த மாநிலங்களிலும், பாஜக மற்றும் அதன் பரிவார அமைப்புகளால் உருவாக்கப்பட்ட மதக் கலவரங்கள் குறித்தும் மக்களவையில் உறுதியான குரல் கொடுத்த இயக்கம் திமுகதான். கோத்ரா ரயில் எரிப்புக்குக் காரணமான, விசுவ ஹிந்து பரிஷத்தின் அயோத்தி யாத்திரையைக் கடுமையாக எதிர்த்தார் எங்கள் தலைவர் கருணாநிதி. நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பாக, அயோத்தியில் மதவாத நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது எனத் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. ஆனால், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது மோடி அரசின் செயல்பாடுகளை ஆதரித்த ஒரே தலைவர் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாதான். திமுக கடுமையாக எதிர்த்தது. பொடா சட்டம் உள்பட அன்றைய பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்த்ததுடன், ஒரு கட்டத்தில் தனது ஆதரவையும் திமுக விலக்கிக் கொண்டது.
திமுகவின் அரசியல், ஆட்சி அதிகாரத்தில் பெண்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக, அமைச்சரவையில் இரண்டு பேர் மட்டுமே பெண்களாக இருப்பதுடன், மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களிலும் மூன்று மகளிருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் தடைகள் இருப்பதாக கருது கிறீர்களா?
திமுகவின் அனைத்து நிலைகளிலும் மகளிர் துணைச் செயலர் என்ற பொறுப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்தல் களம் என்று வரும்போது தொகுதியின் நிலவரம், எதிரணி வேட்பாளர்களின் தன்மை அனைத்தையும் உணர்ந்துதான் திமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதும் திமுக அரசுதான். அதனால்தான் இன்று பல பெண்கள் அதிகார பலம் பெற்றவர்களாக நிர்வாகம் செய்கிறார்கள். இப்போது அதை 50 சதவீதமாக உயர்த்தி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 21 மேயர்களில் 11 பேர் பெண்கள். நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீத தொகுதிகள் ஒதுக்கப்படும்போது, சமமான போட்டி அமையும். அவர்களுக்கான வாய்ப்பும் அதிகரிக்கும். ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் நடைமுறைக்கு உதவாத வகையில் வெறும் சட்டத்தை மட்டும் பாஜக அரசு இயற்றியிருக்கிறது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுகவைச் சேர்ந்த நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாஜகவில் எத்தனை ரௌடிகள், கிரிமினல்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் என்ற பட்டியலை பொதுக்கூட்டத்தில் அறிவித்தேன். அரசியல் கட்சிகளில் பல தரப்பைச் சேர்ந்தவர்கள் இணைவது வழக்கம். அவர்கள் பற்றிய விவரம் தெரிய வரும்போது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதில்தான் ஒரு கட்சியின் கொள்கையும் நோக்கமும் அடங்கியுள்ளது. நீங்கள் குறிப்பிடுவது போன்று போதைப் பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒருவர் திமுகவில் இணைந்திருக்கிறார் என்று தெரிந்த மறுவிநாடியே அவரை நீக்கிவிட்டோம். ஆனால், அதன் பிறகும் அதை வைத்தே விமர்சிக்கும் பாஜக தன் கட்சியிலுள்ள குற்ற வழக்குகளில் தொடர்புடைய எத்தனை பேரை நீக்கியிருக்கிறது? குற்றவாளிகளின் புகலிடமாக பாஜகதான் உள்ளது.
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பது தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும் என்று கருதுகிறீர்களா?
தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு துரும்பையும் பாஜக அரசு கிள்ளிப் போடவில்லை. மீனவர்கள் மீது தாக்குதல், அவர்கள் சிறையில் அடைக்கப்படுதல், படகுகள் பறிமுதல் போன்ற இலங்கையின் செயல்பாடுகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசே துணை போனது. இந்தக் குற்றத்தை மறைக்க, கச்சத்தீவு விவகாரத்தைக் கிளறிப் பார்க்கிறது.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததில் திமுகவுக்குப் பங்கே இல்லையா?
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்க்கக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருந்ததை அன்றைய நாடாளுமன்ற அவைக் குறிப்புகள் மூலம் பிரதமரும் அவரது கட்சியினரும் அறிந்துகொள்ள முடியும். அதுபோன்று, தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி நிறைவேற்றிய தீர்மானத்தையும், அதன் மீதான விவாதங்களையும் படித்துப் பார்த்தால் புரியும். அப்போது, பாஜக என்று ஒரு கட்சியே கிடையாது. அவர்களுக்கு இந்த மண்ணின் அரசியலும் தெரியாது. ஆனால், கச்சத்தீவு விவகாரம் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாஜக செய்த துரோகத்தை மறைக்க பார்க்கிறார்கள். அது எடுபடாது. திமுகவைப் பொருத்தவரை, கச்சத்தீவு பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை பிரதமர் இந்திரா காந்தி காலத்திலேயே பாதுகாத்துத் தந்தது. அவசரநிலை காலத்தில், திமுக ஆட்சியில் இல்லாத சூழலில்தான் அந்த உரிமை பறிபோனது. கச்சத்தீவை மீட்டால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும் என்ற அடிப்படையில் திமுக அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மோடியிடம் நானே நேரில் வலியுறுத்தியிருக்கிறேன். அவர் எதையும் செய்யவில்லை. இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் பாஜகவை குற்றம் சுமத்தும் அதே நேரத்தில் திமுகவும் அதன் மூலம் பலன்களை அடைந்தது முரணாக இல்லையா?
குறிப்பாக லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் இருந்து பாஜக, திமுக நிதியைப் பெற்றுள்ளது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது குறித்து உங்கள் கருத்து?
திமுக வாங்கிய நிதிக்குக் கணக்கு இருக்கிறது. அதை எங்கள் கட்சியின் பொருளாளரே வெளியிட்டுவிட்டார். பாஜக போன்று அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறையால் சோதனைக்குள்ளான நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறவில்லை. பல கட்சிகளுக்கு நிதியளித்துள்ள சில நிறுவனங்கள், திமுகவுக்கும் நிதியளித்திருக்கின்றன. அந்த நிதிக்கான கணக்குகள் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.
பாஜகவை போன்ற இரட்டை வேஷம் திமுகவிடம் இல்லை. மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மட்டும் ஒரே ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த வேறு யாரும் வேட்பாளர்களாக இல்லையே?
திமுக தலைமையிலான கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி. ஜனநாயகத் தன்மையுடன் சுமுகமான முறையில் தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களுடைய வெற்றியும் மக்களால் உறுதி செய்யப்பட்டு வருகிறது. சிறுபான்மை மக்கள் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்குமான இயக்கமாக திமுக திகழ்கிறது. இருக்கின்ற வாய்ப்பின்படி தொகுதிகள் பங்கிடப்பட்டுள்ளன. தேர்தலில் முழுமையான வெற்றி என்பதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம்.
தமிழ்நாட்டின் நிதிநிலை வலுவாக இல்லாவிட்டாலும் ஏராளமான சமூக நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்தனை கடன் சுமைகளுக்கும் இடையில் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து தாங்கள் விளக்க முடியுமா?
நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டே ஒவ்வொரு திட்டமாகச் செயல்படுத்தி வருகிறோம். நீங்கள் குறிப்பிடுவது போன்று, அவை சமூக நலத் திட்டங்கள் என்பதால், மக்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது. எனவே, அவை வெறும் செலவினம் அல்ல; தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான முதலீடு என்றுதான் கருதி செயல்படுத்துகிறோம்.
காவிரி விவகாரத்தில் அதிமுகதான் சிறப்பாகச் செயல்பட்டது. இதற்காக நாடாளுமன்றத்தில் திமுக சரிவரச் செயல்படவில்லை என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டுகிறாரே?
கர்நாடகத்தில் எந்த அரசு இருந்தாலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நல்லிணக்க முயற்சியால் தமிழகத்துக்கு உரிய நீரைப் பெறுவதில் பெருமளவு வெற்றி பெற்றிருக் கிறோம். அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் காவிரியின் பெயரால் செய்த அமளி என்பது, மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதற்கான இரட்டை வேஷமே அன்றி வேறொன்றுமில்லை. அவர்களது அமளி, பாஜகவுக்குத்தான் சாதகமாக அமைந்தது. திமுகவின் முயற்சிகள் ஆக்கபூர்வ பலன்களைத் தந்தன. இனியும் அதுபோன்ற முயற்சிகள் மற்றும் சட்டவழிகள் வாயிலாக காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும்.
மாநில அரசுகளின் ஆலோசனைக்குப் பிறகு ஆளுநர் நியமிக்கப்படுவார் என்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதியில் திமுக தெரிவித்துள்ளது. இது சாத்தியமா?
கடந்த காலங்களில் மத்திய அரசில் பங்கு வகித்தபோது ஏன் இதை திமுக செய்யவில்லை? எப்போதெல்லாம் மத்திய அரசில் திமுக அங்கம் வகிக்கிறதோ, அப்போதெல்லாம் மாநில உரிமைகள், மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆளுநர் பதவி என்பது தேவையற்றது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு. ஆனாலும், அந்தப் பதவியை உடனடியாக நீக்கும் வாய்ப்பு இல்லாத நிலையில் மாநில அரசின் ஒப்புதலுடன் ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்துகிறது. ஆளுநர்களுக்கும் மாநிலத்தில் ஆட்சி செய்பவர்களுக்குமான உரசல்கள் முந்தைய காலங்களில் பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைப் புறக்கணித்து, ஆளுநரை வைத்து இணை அரசை நடத்த நினைக்கும் போக்கும், அரசியல் சட்டத்தின் மாண்பைக் குலைக்கும் வகையிலான ஆளுநரின் செயல்பாடுகளும் பாஜக ஆட்சியில்தான் ஊக்குவிக்கப்படுகின்றன. அதனால் இந்தப் பிரச்னை இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மத்தியில் “இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
நன்றி: தினமணி