சென்னை: இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றிபெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற 66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சந்தித்து, பதக்கங்கள் (ம) கேடயங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 66-வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டிகள் கடந்த 13 ஆம் தேதி நடைபெற்றது. இதில்  அறிவியல் சார்ந்த புலன் விசாரணை திறன் போட்டி, கணினி திறன் போட்டி, வெடிகுண்டு தடுப்பு திறன் போட்டி, மோப்ப நாய் திறன் போட்டி, வீடியோ எடுக்கும் திறன் போட்டி மற்றும் தொழில் ரீதியாக புகைப்படம் எடுக்கும் திறன் போன்ற போட்டிகளில் தமிழ்நாடு காவல் துறையினர் சார்பில் 70 பேர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறையினர் வெற்றி பெற்று பக்கங்கள் மற்றும் கேடையங்களை பெற்றனர். இதனையடுத்து, அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் முதலமைச்சரை சந்தித்து அவர்கள் வென்ற பதக்கங்கள் மற்றும் கேடையங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.