சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது வாங்கப்பட்ட பேருந்துகள், கலர் மாற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், புதுப்பிக்கப்பட்ட 100 அரசு பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்டு 11ந்தேதி தொடங்கி வைக்கிறார்
டந்த அதிமுக ஆட்சியில் பச்சை நிறத்தில் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், பிஎஸ் 4 ரக பேருந்து வருகையால் பேருந்துகள் நீல நிறத்துக்கு மாற்றப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் தற்போது புறநகர் செல்லும் புதிய பேருந்துகள் நீல நிறத்திலும், நகர, மாநகர பேருந்துகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலேயே இயக்கப்படுகின்றன. தற்போது பேருந்துகளின் நிறத்தை திமுக அரசு மாற்றி புதுப்பித்து வருகிறது.
ஏற்கனவே பெண்களுக்காக இயக்கப்பட்டும் கட்டணமில்லா பேருந்துகளை அடையாளம் காணும் வகையில் முன், பின் பக்கங்களில் பிங்க் நிறம் அடிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சில பேருந்துகள் முழுவதும் பிங்க நிறத்தில் காணப்படுகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பயன்படுத்த 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பழைய பேருந்துகளுக்கு, திமுக தலைவர் மறைந்த கருணாநிதிக்கு பிடித்த நிறமான, மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு வருகிறது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிட்டு மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி முதற்கட்டமாக 100பேருந்துகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அநத் பேருந்துகளை வரும் 11-ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ஏற்கனவே பள்ளி, கல்லூரி பேருந்துகள், மாணவர்கள் பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் விதிகள் உள்ள நிலையில், தற்போது அரசு பேருந்துகளும் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்டு வருவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.