சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் (டிசம்பர் 26ந்தேதி) கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்கிறார். அப்போது, அங்கு கட்டப்பட்டுவரும்  புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைப்பதுடன்,  தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு முடிவுற்ற கட்டிடங்களை திறந்து வைக்கவும், பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவும் நாளைமறுநாள் (26-ந் தேதி) சென்னையில் இருந்து புறப்பட்டு கள்ளக்குறிச்சி வருகை தருகிறார். அதனை முன்னிட்டு (26-ந் தேதி) காலை 10 மணி அளவில் தியாகதுருகம் எல்லையான திம்மலை ரோடு பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் முதலமைச்சருக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து  காலை  10.30 மணி அளவில் கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொடர்ந்து 11 மணி அளவில் ஏமப்பேர் ரவுண்டானா சேலம் புறவழிச்சாலை சந்திப்பில் மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு,  முற்பகல்  11.15 மணி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடைக்கு முதலமைச்சர் வருகை தந்து சுமார் 70 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரத்தில் 8 தளங்களை கொண்டு ரூ.139 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 35.18 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் தியாகதுருகம் வழியாக மணலூர்பேட்டை சென்றடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். பின்னர்   இரவு திருவண்ணாமலை செல்கிறார்.

முதல்வர் ஸ்டாலின், நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் வருகையொட்டி கள்ளக்குறிச்சி பகுதியில் தி.மு.க. பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டு விழாகோலம் பூண்டுள்ளது.

முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகப் பயன்பாட்டிற்காக கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடன், அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடம் 8 தளங்களைக் கொண்டு ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமார் 35.18 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

புதிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார்கள். அந்த வகையில் இன்றைய தினம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டட நிறைவுப் பணிகள் மற்றும் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நிறைவுப் பணிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் , சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் உடனிருந்தனர்.

[youtube-feed feed=1]