சென்னை: தனது சிறுநீரக பிரச்சினைக்கு உதவி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த சேலம் சிறுமி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அந்தச்சிறுமியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

சேலம் மாவட்டத்தைச்  சேர்ந்த ஜனனி என்ற சிறுமி, தனக்கு கிட்னி பாதிப்பு உள்ளதாகவும், அதற்கு முதல்வர் உதவி செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு வீடியோ பதிவு ஒன்று மூலம் வேண்டுகோள்  வெளியிட்டிருந்தார். அதில், எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு கிட்னி பெய்லியர் ஆகிவிட்டதாக சொன்னார்கள். கடந்த இரண்டு வருடங்களாக டயாலிஸிஸ் செய்து கொண்டிருக்கிறேன் வலி தாங்க முடியல.  எல்லாரும் என்னைய செத்துருவேன்னு சொல்றாங்க. பிளீஸ் சிஎம்  ஹெல்ப் பண்ணுங்க  என்று பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின்,  பாதிக்கப்பட்ட சிறுமியுடனும் அவரது தாயுடனும் தொலைபேசியில் பேசினார். அப்போது,  சிறுமியின் பிரச்சினை தொடர்பாக சுகாதாரத் துறையில் பேசி உள்ளதாகவும், காத்திருப்பில் உள்ளதால் வந்தவுடன் முதல் உரிமை கொடுக்க சொல்லி உள்ளதாகவும் பயப்பட வேண்டாம் காப்பாற்றிவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இநத் நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியை, முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.