சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செய்தார். அதையடுத்து, தாயார் தயாளு அம்மாவிடம் ஆசி பெற்றார். பின்னர் பிற்பகல் சிஐடி காலனியில் உள்ள வீட்டுக்குச் சென்று ராசாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார். அவருக்கு கனிமொழி வாழ்த்து தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அண்ணா, கருணாநிதி, பெரியார், சமாதிகள் மற்றும் அன்பழகன் படத்துக்கு மரியாதை செய்தவர் மதியம் கோட்டைக்கு சென்று முதல்வர் பொறுப்பை ஏற்றார். அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த மு.க.ஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
பின்னர் கோட்டையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், மயிலாப்பூர் சிஐடி காலனியில் அமைந்துள்ள மறைந்த கருணாநிதியின் துணைவியார், ராசாத்தி அம்மாள் இல்லத்திற்கு சென்றார். அவரை, தங்கையும், எம்.பி.யுமான கனிமொழி வரவேற்றார். வீட்டுக்குள் வந்த ஸ்டாலின், ராசாத்தி அம்மாள் காலைத் தொட்டு ஆசி பெற்றார்.
ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து கிளம்பியதும் நேராக சிஐடி காலனி இல்லம் சென்று ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றது கனிமொழிக்கும் உற்சாகத்தை தந்துள்ளது.
முன்னதாக ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில், திமுக எம்.பி. கனிமொழி தனது மகன் ஆதித்யாவுடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.