தருமபுரி: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள  மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ள மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப் பதிவு முகாமை  தருமபுரியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக  முதல்கட்டமாக ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.   இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி குடும்ப தலைவிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பயனர்களை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் பயனர்களுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, விண்ணப்பதிவு முகாம் இன்று மாநிலம் முழுவதும் தொடங்கப்படுகிறது. . இந்தத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் அரசால் அச்சடிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து அவை ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  தருமபுரியில் தொடங்கி வைக்கிறார். தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா மேடையில் , மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்தும் முதல்வர் உரையாற்ற இருக்கிறார்.

கலைஞர் உரிமைத்தொகை  விண்ணப்பப் பதிவு முகாம் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை5.30 மணி வரையும் நடத்தப்படும்.  விண்ணபங்களை பதிவு செய்யவும், பின்னர் அதனை படிவேற்றம் செய்யவும் தமிழ்நாடு முழுவதும் 35,923 முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளன.