காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மகளிர் உதவித்தொகை வழங்கும் விழாவில், பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தனது குடும்ப பெண்களை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். “மகளிர் நலம் காத்த மாண்பாளர் என்றால் தலைவர் கலைஞர்தான். அவர் பெயரால் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுவது மிகமிகப் பொருத்தமானதே!” என தெரிவித்துள்ளார்.
தமிழக பெண்கள் எதிர்பார்க்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, தகுதியுள்ள 1கோடியே 6 லட்சம் மகளிருக்கு இனி மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பிரத்யேக ஏடிஎம் கார்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தலைவர் என்பார் , தத்துவ மேதை என்பார், நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார், சொல்லாற்றல் சுவை மிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார், மனிதரென்பார் , மாணிக்கமென்பார், மாநிலத்து அமைச்சரென்பார் , அன்னையென்பார், அருமொழிக் காவல் என்பார் , அரசியல்வாதி என்பார், அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் –
நெஞ்சத்து அன்பாலே ‘அண்ணா’ என்பார் – என்று, காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா பற்றி அடுக்கு மொழியால் எழுதிக் காட்டினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அத்தகைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பிறந்தநாளான இன்று – அவரை தந்த தாய் மடியாம் கலைமிகு காஞ்சி மாநகருக்கு நான் வருகை தந்துள்ளேன். என்னுடைய அரசியல் பயணத்திற்கு எத்தனையோ உந்து சக்திகள் இருக்கலாம்.
அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல் இருந்த உந்து சக்தி எது என்று கேட்டால், இந்தக் காஞ்சி நகரம்தான். முதன்முதலாக 12 அல்லது 13 வயதில் என்னைப் பொதுவாழ்வில் ஈடுபடுத்திக் கொண்ட நேரத்தில் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி .மு.க. என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலமாக நான் பல நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தேன்.
அதையொட்டி 1971 ம் ஆண்டு அறிஞர் அண்ணா துயில் கொண்டிருக்கக்கூடிய அவருடைய கல்லறையில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்து, வணங்கி அங்கிருந்து கையில் ஒரு தீப்பந்தத்தை அண்ணா ஜோதியை கையில் ஏந்தி தொடர் ஓட்டமாக நானும் எனது நண்பர்களும் புறப்பட்டோம்.
“மகளிர் நலம் காத்த மாண்பாளர் கலைஞர்தான்.. மகளிர் உரிமைத் திட்டத்தின் நோக்கம் இதுதான்” : முதலமைச்சர் உரை!
அதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து தொடர் ஓட்டமாக இந்தக் காஞ்சி நகரத்துக்கு வந்தோம். காஞ்சிபுரத்தில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர் கரத்தில் அண்ணா ஜோதியை நான் ஒப்படைத்தேன்.
அதை ஒப்படைத்த நேரத்தில், கலைஞருக்குப் பக்கத்தில் அன்றைக்கு பொதுச்செயலாளராக இருந்த நாவலர் அவர்களும், பொருளாளராக இருந்த மரியாதைக்குரிய எம்.ஜி.ஆர் அவர்களும் இருந்தார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைப்பது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
தாய் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்கள் – இனி இந்தப் பெயரை யாராலும் நீக்க முடியாது. இந்தப் பெயர் நீட்டிக்கும் காலமெல்லாம் இந்த நாட்டை அண்ணாத்துரை தான் ஆள்கிறான் என்று பொருள் என்று குறிப்பிட்டார்கள்.
இன்றைக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் படி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் ஆயிரம் ரூபாய் பெறுவார்களோ அத்தனை ஆண்டுக்கு இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.
“மகளிர் நலம் காத்த மாண்பாளர் கலைஞர்தான்.. மகளிர் உரிமைத் திட்டத்தின் நோக்கம் இதுதான்” : முதலமைச்சர் உரை!
* மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியைத் தரும் விடியல் பயணம் திட்டத்தை உருவாக்கி நாளில் –
*பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை உருவாக்கிய நாளில் –
*அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி கற்க வரும் மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடங்கிய நாளில்
* நான் முதல்வன் திட்டம் தொடங்கிய நாளில் நான் எத்தகைய மகிழ்ச்சியை அடைந்தேனோ – அதே மகிழ்ச்சியை –
இன்னும் சொன்னால் அதை விட அதிக மகிழ்ச்சியுடன் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன்.
ஆயிரம் ரூபாய் கிடைத்தால் என்ன பாட்டி செய்வீர்கள் என்று மூதாட்டி ஒருவரிடம் நிருபர் கேட்கிறார்…
* ”மாத்திரை வாங்குவேன்யா… காசு இல்லாததால மருந்து மாத்திரை சாப்பிடுறதில்லையா” என்று அந்த மூதாட்டி சொல்லி இருக்கிறார்.
”தினமும் ஒரு வேளை தான் சாப்பிடுறேன்.. இந்த ஆயிரம் ரூபாய் கிடைச்சா… காலையில ரெண்டு இட்லி சாப்பிடுவேன்” என்று ஒரு பெண்மணி சொல்கிறார்.
‘* ‘சுருக்கு பையில பணம் இருந்துச்சுன்னா நிமிந்து நடந்து போவேன்’ என்று இன்னொரு பெண்மணி சொல்கிறார்
இந்தக் கூட்டத்தில் இருக்கும் பெண்மணிகள் ஒவ்வொருவரைக் கேட்டாலும் ஆளுக்கு ஒவ்வொரு பதிலைச் சொல்வீர்கள்.
மொத்தத்தில் உங்கள் வாழ்க்கைக்கு உதவியாய் இருக்கப் போகிறது இந்த ஆயிரம் ரூபாய்.
தினமும் உதிக்கும் உதயசூரியன் உங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுப்பதைப் போல –
உதயசூரியனின் ஆட்சியும் உங்களுக்கு தினந்தோறும் புத்துணர்ச்சியை வழங்க இந்த ஆயிரம் ரூபாய் பயன்படப்போகிறது. திராவிட முன்னேற்றக்கழகம் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதி இது.அளித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதி இது.இப்படி ஒரு திட்டத்தை அறிவித்ததும் – இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்று சொன்னார்கள். பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து திமுக, மக்களை ஏமாற்றிவிட்டது என்று சொன்னார்கள். இவர்களால் தர முடியாது என்று சொன்னார்கள்.
“மகளிர் நலம் காத்த மாண்பாளர் கலைஞர்தான்.. மகளிர் உரிமைத் திட்டத்தின் நோக்கம் இதுதான்” : முதலமைச்சர் உரை!
ஆட்சிக்கு வந்ததும் கொடுத்திருப்போம். ஆனால் நிதி நிலைமை சரியாக இல்லை. எனவே, நிதி நிலைமையைச் சரி செய்து விட்டு – இப்போது கொடுக்கிறோம்.இதனைச் சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொய்களையும் வதந்திகளையும் கிளப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள் சிலர். அறிவித்துவிட்டால், எதையும் நிறைவேற்றிக் காட்டுவான் இந்த ஸ்டாலின் என்பதை தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.
சொன்னதைச் செய்வான் கலைஞரின் மகன் என்பதற்கு சாட்சியாக இந்த விழா காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல – தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள், எங்கள் கூட்டணி சின்னத்தை அமுக்கியதால் தான் நான் இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். அந்த உரிமையைக் கொடுத்தவர்கள் நீங்கள் தான். மக்கள் கொடுத்த வாய்ப்பை மக்களுக்கே நான் பயன்படுத்துகிறேன். மக்களுக்காகத் தான் பயன்படுத்துவேன்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்திய திட்டங்களை குறிப்பிட்டார். தொடர்ந்து பேசும்போது, தற்போதைய திமுக ஆட்சியில் மகளிருக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்த தகவல்களை கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தன் குடும்ப பெண்கள் குறித்து பேசத் தொடங்கியவர், என்னில் பாதி என் மனைவி துர்கா.. தாய் தயாளு, மகள் செந்தாமரை குறித்து நெகிழ்ந்து பேசினார்.
தாயின் கருணை, மனைவியின் உறுதுணை, மகளின் பேரன்பு இவை எல்லாம் ஒருவருக்கு கிடைத்து விட்டால் வேறு செல்வம் எதுவும் தேவையில்லை. உண்மையில் உலகை வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும் தான் என்றவர், இவை எல்லாம் ஒருவருக்கு கிடைத்து விட்டால் வேறு செல்வம் எதுவும் தேவையில்லை. உண்மையில் உலகை வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும் தான். என்னுடைய தாய் தயாளு அம்மாள் கருணையே வடிவானவர்கள். சிறு வயதில் நான் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால் அன்றைக்கு மழை வரக்கூடாது என வேண்டி கொள்வார்.
எனது அரசியல் வாழ்க்கையில் தொடக்க காலக்கட்டத்தில் சிறு சிறு சம்பவங்கள் கூட என் அம்மாவிடம் சொல்லி தான் கலைஞர் கிட்ட சொல்லுவேன். இன்னைக்கு அவங்க வயது முதிர்ந்த நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை போய் பார்க்கும்போ தெல்லாம் அவரின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதேபோல் தான் என்னுடைய மனைவி துர்காவும், என்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு என்னுடன் இருக்கிறார்கள்.
திருமணமாகி 5வது மாதத்தில் மிசாவில் கைது செய்யப்பட்டு நான் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டேன். என் மனைவி அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. முதலில் அவருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என சொல்லி தன்னை பக்குவப்படுத்தி கொண்டார். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள். எல்லாவற்றிலும் எனக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருந்து என்னோட மிகப்பெரிஉய சக்தியாக இருப்பது துர்கா தான்.
அடுத்து என்னுடைய மகள் செந்தாமரை. அன்பின் வடிவம் அவர். நான் எந்த பொறுப்பில் இருந்தாலும் தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என இருப்பார். ஒரு அரசியல்வாதியின் மகள் என்னுடைய சாயல் தன் மீது விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். சுயமாக வரவேண்டும் என நினைப்பவர். அந்த வகையில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன். கருணைமிகு தாய், தூணாக விளங்கும் மனைவி, தன்னம்பிக்கை கொண்ட மகள் என இந்த மூன்றும் எனக்கு கிடைத்துள்ளது. இதே மாதிரி குணம் கொண்டவர்கள் தான் மகளிர் அனைவரும்.
சுயமாக வளர வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில் நாம் மிக கொடுத்து வைத்தவன். கருணை மிகு தாய் – தூணாக விளங்கும் மனைவி -தன்னம்பிக்கை கொண்ட மகள் – இம்மூன்றும் வாய்த்தவன் நான். இத்தகைய பேருள்ளம் கொண்டவர்கள் தான் மகளிர் அனைவரும்.
மகளிர் நலம் காத்த மாண்பாளர் என்றால் தலைவர் கலைஞர் அவர்கள் தான்.
• பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டு வந்தது தி.மு.க. அரசு.
• பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். அதை இப்போது 40 விழுக்காடு ஆக்கியிருக்கிறோம்.
• உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். இன்றைக்கு அது 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டு, அதற்கும் மேலாக பெண்கள் இன்றைக்கு மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று, மக்கள் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
• ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கியது.
• ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரிவரை இலவசக் கல்வியும் வழங்கியது.
• ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக, மகளிரை நியமித்த்து.
• டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு உதவித்திட்டம்,
• மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண உதவித்திட்டம்,
• டாக்டர் தருமாம்பாள் கைம்பெண் மறுமணத் திட்டம்,
• அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம்,
• ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழைக் கைம்பெண்களின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம்
இப்படி எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் பெயரால் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுவது மிகமிகப் பொருத்தமானதே. அவரது நூற்றாண்டு விழா ஆண்டில் தொடங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.