மதுரை: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் 61வது குரு பூஜை விழா நடைபெற்று வருகிறது. தென்மாவட்டங்களில் ஆன்மிக விழாவாக கொண்டாடப்படும் தேவர் குருபூஜையொட்டி, இன்று பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு , தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மலர்தூவி, மாலை அணிவித்தனர்.
முன்னதாக விமானம் மூலம் நேற்று மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மதுரை கோரிபாளையம் பஸ் நிலையம் உள்ள தேவர் சிலைக்கும், தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இரண்டு புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, கார் மூலம் பசும்பொன் சென்றார். திருப்புவனம், மானாமதுரை, பார்த்திபனூர் வழியில் சாலை மார்க்கமாக பசும்பொன் கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து பசும்பொன் தேவர் நினைவிடத்தில், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துகின்றனர். மேலும் சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செய்ய உள்ளனர்.
முதல்வர் வருகைக்காக நினைவிடத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென்மண்டல ஐ.ஜி நரேந்திரன் நாயர் தலைமையில் 4 டிஐஜிகள், 30 எஸ்.பிகள் முன்னிலையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.