சென்னை: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டையொட்டி கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், நவீன கருவிகள், ஊர்திகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்,  பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு புதிய கட்டடத்தை முதலமைச்சர்  திறந்து வைத்தார். ரூ.65.60 கோடியில் புதிதாக 6 தளங்களுடன் கட்டப்பட்ட கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த கட்டிடத்தில் உள்ள கல்வெட்டினையும் அவர் திறந்து வைத்தார். மேலும், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு 63.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிட்டார்.

பின்னர் எழும்பூர் அரசு  குழந்தைகள் நல மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை, தாம்பரம் அரசு மருத்துவமனை, மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வென்டிலேட்டர்கள், அல்ட்ரா சவுண்ட் மெஷின்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை சம்பந்த பட்ட அதிகாரிகளிடம் வழங்கினார்.

தொடர்ந்து,  தமிழகத்தில் உள்ள 26 மின்கல ஊர்தியை சற்று நேரத்தில் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, பொதுசுகாதார மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பாக கருணை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 152 களப்பணி உதவியாளர்கள், மின் பணியாளர்கள் மொத்தம் 237 நபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணை வழங்கினார்.