சென்னை: நாடு முழுவதும் இன்றுமுதல் 15முதல் 18வயதோருக்கான தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொற்று பரவலில் இருந்து நம்மை பாதுகாகக் முகக்கவசமே கேடயம், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என மன்றாடி கேட்டுக் கொள்கி றேன் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நாடு முழுவதும இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாட்டில் தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடை 33 லட்சம் பேரில் 27 லட்சம் பேர் பள்ளியில் பயில்வ தால் அவர்கள் அனைவருக்கும் பள்ளிகளிலேயே பெற்றோரின் அனுமதியுடன் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இன்று ‘சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கொரோனா 2வது அலையின்போது அரசு தீவிர நடவடிக்கை எடுத்து அதன் வீரியத்தைக் குறைத்தது. தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் நடவடிக்கை களையும் மேற்கொண்டது
இவ்வாறாக ஒரு பெருமூச்சுவிட்ட நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவி , நம்மை மிரட்டத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரானில் இருந்து பாதுகாத்துக்கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும்.
உருமாறியுள்ள ஒமிக்ரான் வைரஸின் பாதிப்பு குறைவு என்பது ஆறுதலான விஷயமென்றாலும் கூட அது பரவும் வேகம் அச்சுறுத்துகிறது. இனி வரும் நாட்களில் தமிழகத்திலும் நிச்சயமாக ஒமிக்ரான் அதிகமாகப் பரவப்போகிறது. எனவே நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
தொற்று பரவலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது முக்கியம். அதுதான் கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய கேடயம். ஆகவே முகக்கவசம் இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மூன்றாவதாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 60 வயதுக்கும் மேற்பட்டோர் யாரேனும் இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் உடனடியாக செலுத்திக் கொள்ளவும். இரண்டு டோஸும் முழுமையாக செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ளுங்கள்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அனைவரும் பாதுகாப்புடன் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. தடுப்பூசிகள், நோய் எதிர்ப்பை தொடர்ந்து அளித்து வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொண்டால் இறப்பு விகிதம் குறைவு.
இதை நான் உங்கள் வீட்டுப் பிள்ளையாக மன்றாடிக் கேட்கிறேன். இருகை இணைந்தால் தான் ஓசை வரும். மக்கள் ஒத்துழைப்புடன் தான் கரோனாவை எதிர்கொள்ள முடியும் ” நோயில் இருந்து விடுபட்ட மாநிலம் என்ற பெயரை எடுக்கவேண்டும்; அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அதிகாரிகள் ஜெ.ராதா கிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.