தூத்துக்குடி: தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தூத்துக்குடியில் ரூ.1000 கோடி மதிப்பிலான பர்னிச்சர் பூங்காவுக்கு  முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் சுமார் மூணரை லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழகஅரசு தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளது  என்றும், பெல்ஜியம் நிறுவனம்டு ரூ. 450 கோடி முதலீட்டில் ஜன்னல் கதவுகள் தயாரிப்பில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்ததுடன். தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்க சிப்காட் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

தென்மாவட்டங்களில் தொழில்வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் பெருக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்தியாவில் மரத்தடிகள் இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் 3-வது இடத்தில் உள்ளது. மியான்மர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து மரத்தடிகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவே, சர்வதேச தரத்தில் பர்னிச்சர்கள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் தூத்துக்குடியில்  பர்னிச்சர் பூங்கா அமைக்கப்பட்ட உள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக சர்வதேச தரத்தில்  தூத்துக்குடியில் ரூ. 1,000 கோடியில் மதிப்பிலான பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படுகிறது இதன் மூலம் நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக இந்த பர்னிச்சர் பூங்கா அமைந்துள்ளது. நாட்டில் உள்ள முன்னணி பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து உள்ளன.

இந்த பர்னிச்சர் தொழில் தொடர்பாக ஆண்டு தோறும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சிக் கூடம், பர்னிச்சர் பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம், கூட்ட அரங்கம், வீடியோ கான்பரன்சிங் வசதி, தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் போன்ற அனைத்து வசதிகளும் இதில் இடம்பெறுகிறது.

இந்த பூங்கா மூலம் சுமார் ரூ. 4 ஆயிரத்து 500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. பர்னிச்சர் பூங்கா மூலமாக நேரடியாகவும், மறைமுக மாகவும் சுமார் 3½ லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. . இதற்காக தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 1,150 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து பூர்வாங்க பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த பர்னிச்சர் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவானது, தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள மாணிக்கம் மகாலில் இன்று காலை நடை பெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்காவுக்கான அடிக்கலை நாட்டினார்.

விழாவில் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் வரவேற்று பேசினார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி., மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மேயர் ஜெகன் பெரியசாமி, வழிகாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி, தொழில் வணிக ஆணையர் சிஜி தாமஸ், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குனர் நிஷாந்த் கிருஷ்ணா, மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் ஸ்கேல் கமிட்டி தலைவர் பவண் கோயங்கா, ராம்கோ குழுமத்தின் தலைவர் வெங்கட்ராம ராஜா மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.