திருச்சி: நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ள நிலையில் இன்று திருச்சி கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.  அங்கு தூர்வாரும் பணிகள் குறித்து  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை முழுமையாக சென்று சேரும் வகையில், 65 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில்  திருச்சி சென்றார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து, காரில் கல்லணை கால்வாய் பகுதிக்குச் சென்றார். அங்கு , தூர்வரும் பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுரகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்பட அதிகாரிகள் இருந்தனர். அதிகாரிகளுடன் தூர் வாரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேட்டூர் அணையில் இருந்து  டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி   தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு குறுவை சாகுபடிக்காக வழக்கமான தேதியில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.  இதை நாளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நீரான   திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி பாசனத்துக்கு பயன்படும்.

இந்த நிலையில், கல்லணை கால்வாயில் கடைமடை வரை, தண்ணீர் செல்ல வசதியாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியுதவியுடன் நவீனப்படுத்துதல், சீரமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. இந்த நீர் செல்லும் பாதைகளில் உள்ள அடைப்புகள் மற்றும் தடுப்புகளை சீர் செய்து, காவிரி நீர் கடைமடை வரை முழுமையாக சென்று சேரும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ரூ.65.11 கோடி மதிப்பீட்டில் தூர் வாரும் பணிகள் நடந்து வருகிறது.  இந்த பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இ

றிப்பிட்ட காலத்தில் மேட்டூர் திறக்கப்படுவதால் தண்ணீரை எதிர்பார்த்து தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் ஆர்வமுடன் முதற்கட்ட குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, இன்று காலை திருச்சி சென்ற முதல்வர், அங்கு கல்லணை பகுதிக்கு சென்று தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிற்பகல் தஞ்சை செல்கிறார். அங்கு,.  முதலைமுத்துவாரி கொடிங்கால் வாய்க்கால் மற்றும் வெண்ணாற்றில் நடைபெறும் பணிகளையும் பார்வையிடுகிறார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதைத்தொடர்ந்து நாளை காலை காவிரி ஆறு செல்லும் பாதையில் நடக்கும் தூர்வாரும் பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை மதியம்  12.30 மணியளவில் மீண்டும், திருச்சி வரும் முதல்வர் விமானத்தில் சேலம் புறப்பட்டு செல்கிறார். அங்கு நாளை பிற்பகல் மேட்டூர் அணையை பாசனத்துக்கு திறந்து வைக்கிறார்.