சென்னை: வேளச்சேரியில் ரூ.108 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.
வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் தரமணி முதல் 100 அடி சாலை வரை 1,028 மீட்டர் நீளம், 13.5 மீட்டர் உயரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் அமைக்க ரூ.108 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணியை கடந்த 2016-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தரமணி சாலையில் இருந்து வேளச்சேரி விரைவு சாலை வரை 36 தூண்கள் அமைத்து பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதன் மைய பகுதி 50 அடி உயரம் கொண்டது. அதேபோல் வேளச்சேரி விரைவு சாலையில் இருந்து தாம்பரம் சாலை வரை 17 தூண்கள் அமைத்து பாலம் கட்டப்பட்டு உள்ளது.
புதிய மேம்பாலத்தின் ஒரு பகுதியை போக்கு வரத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதாவது, 2-ஆம்அடுக்கு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.