சென்னை:  சென்னையில் இன்று காலை நடைபெற்ற குடியரசு தின விழாவில் கிருஷ்ணகிரி முகமது ஜூபேர், மதுரை ஆயி பூர்ணம் அம்மாள் உள்பட பலருக்கு தமிழ்நாடு அரசின் வீர தீர செயலுக்கான விருதுகளை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின்  கவுரவித்தார்.

வீரத்திற்கான அண்ணா பதக்கம் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த யாசர் அராபத், டி.டேனியல் செல்வசிங், எஸ்.சிவகுமார் (தாசில்தார்) ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டது.  மேலும், விவசாயப் பணிகளை மேற்கொண்டுவரும் 3 பேருக்கு நம்மாழ்வாா் விருது வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுபேர் என்பவருக்கு மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருதும்,  தனக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தானமாக அளித்த மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த பூர்ணம் அம்மாளுக்கு குடியரசு தின விழாவில் முதல்வர் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

சென்னை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நாட்டின் 75வது குடியரசு தினத்தையொட்டி, கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையே ஏற்றார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், நீதிபதிகள், முக்கியஸ்தவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு அறிவித்த வீர தீர செயல்களுக்கான விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.  அதில், தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை  கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அம்மாளுக்கு இன்றைய குடியரசு தின விழாவில்  முதல்வர் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் குடியரசு தலைவர் விருது பட்டியல்:  tngovt award _Notification 25-01-2024

அதுபோல,  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி பஞ்சாயத்து உருது பள்ளி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முகமது ஜுபேர் என்வருக்கு மத  நல்லிணக்கத்திற்கான விருது வழங்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய குடியரசு தின விழா நிகழ்ச்சியில்  மத நல்லிணக்கத்திற்கான விருது வழங்கி கவுரவித்தார்.

முகமது ஜுபேர் Alt News என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கி, சமூக வலைதளங்களில் வரும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, உண்மையான செய்திகளை மட்டுமே இணையதளத்தில் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதன் காரணமாக அவருக்கு மதநல்லிணிகத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பாலமுருகனுக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித்திறன் விருது வழங்கங்பபட்டது.

வீரத்திற்கான அண்ணா பதக்கம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த  யாசர் அராபத் என்பவருக்கு வாங்கப்பட்டது.  மேலும்,  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேனியல் செல்வசிங் எஸ் சிவக்குமார், தாசில்தார், ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா, தூத்துக்குடி மாவட்டம் ஆகியோரும் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி காயல்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் யாசிர் அராபத், மற்றவர்களுடன் இணைந்து டிசம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக கிராமத்தில் பெரும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 250 க்கும் மேற்பட்டவர்களை மீட்டனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த டேனியல் செல்வசிங் என்பவர் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளுக்கு பால் பாக்கெட்டுகள், உணவுகள் மற்றும் பிற பொருட்களை விநியோகிக்கும் பெரிய அளவிலான நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.

தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டம் தாசில்தார் எஸ் சிவக்குமார் அவர்கள் தாமரபரணி வழியாக வீடு வீடாகச் சென்று ஆறு விரைவில் நிரம்பி வழியும் என்று அறிவித்து மக்களைக் காலி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதன் விளைவாக, வெள்ளத்திற்கு முன்னதாக 2400 பேர் காப்பாற்றப்பட்டனர்.

காந்தி அடிகள் காவல் பதக்கம் விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்,  ஜி சஷாங்க் சாய்,  மத்திய உளவுப் பிரிவு, தெற்கு, சென்னை எஸ்பி பி காசிவிஸ்வநாதன்,  சென்னை மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம், ரெட் ஹில்ஸ் தடை அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர், , கே.எம்.முனியசாமி,  எஸ்.ஐ.,மதுரை மண்டலம் மத்திய உளவுப் பிரிவு எஸ்ஐ  பாண்டியன், ராணிப்பேட்டை காவல் நிலையம்  தலைமைக் காவலர் கே ரங்கநாதனுக்கும் வழங்கங்பபட்டது.

அங்கக வேளாண்மையைப் பின்பற்றி விவசாயப் பணிகளை மேற்கொண்டுவரும் 3 பேருக்கு நம்மாழ்வாா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்ணை மாசுபடுத்தாமல் வேளாண் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருது வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. விருதுடன் பரிசுத் தொகை, சான்றிதழ், பதக்கம் ஆகியன வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நிகழாண்டுக்கான நம்மாழ்வாா் விருதுக்கு 3 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, தஞ்சாவூா் மாவட்டம் மகா்நோன்புச்சாவடியைச் சோ்ந்த கோ.சித்தா், முதல் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு ரூ. 2.50 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ், பதக்கம் ஆகியன வழங்கப்படும். 2-ஆம் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள, திருப்பூா் மாவட்டம் பொங்கலூரைச் சோ்ந்த கே.வெ.பழனிச்சாமிக்கு, ரூ. 1.50 லட்சம் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் அளிக்கப்பட உள்ளன. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் அச்சுக்கட்டு கிராமத்தைச் சோ்ந்த கு.எழிலன் 3-ஆம் பரிசுக்கு தோ்வாகியுள்ளாா். அவருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் ஆகியன வழங்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த காவல் நிலையங்களுக்கான முதல்வர் கோப்பைகள்

முதல் பரிசு: மதுரை நகரம்
இரண்டாம் பரிசு: நாமக்கல் மாவட்டம்
மூன்றாம் பரிசு: பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் ஆகியவைக்கு வழங்கப்பட்டது.

குடியரசு தின விழாவில், பள்ளி, கல்லூரி மாணவிகளின் கிராமிய நடனம் நடைபெற்றது. இதில், கல்லூரிகள் பிரிவில் ராணி மேரி, ஸ்டெல்லா மேரிஸ், சோகோ இகேதா ஆகியகல்லூரிகளுக்கு முதல் 3 பரிசுகளையும், பள்ளிகள் பிரிவில் சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா, பெரம்பூர் லூர்து, அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளிகளுக்கு முதல் 3 பரிசுகளையும் ஆளுநர் வழங்கினார்.

அலங்கார வாகனங்களில் முதல் பரிசு தீயணைப்பு துறைக்கும், 2-வது பரிசு காவல் மற்றும் சுகாதாரத் துறைக்கும், 3-வது பரிசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைவாகனங்களுக்கும் வழங்கப்பட்டது. இதற்கானகேடயங்களை துறை செயலர்கள் அமுதா, ககன்தீப்சிங் பேடி, அதுல்ய மிஸ்ரா பெற்றனர்.

அதிக அளவில் கொடிநாள் நிதி வசூலித்த திருவள்ளூர், சென்னை, திருச்சி மாவட்டங்களுக்கான சுழற்கோப்பையை மாவட்ட ஆட்சியர்கள் டி.பிரபுசங்கர், ரஷ்மி சித்தார்த் ஜகடே,மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி பெற்றனர். கோவை ஆணையர் சிவகுரு பிரபாகரனுக்கு மாநகராட்சிக்கான கோப்பை வழங்கப்பட்டது. கொடிநாள் நிதியில் பங்களிப்பு சதவீதஅளவில் முதல் 3 இடம் பிடித்த கடலூர், செங்கல்பட்டு, பெரம்பலூர் மாவட்டங்களுக்கான கோப்பைகளை, ஆட்சியர்கள் அருண்தம்புராஜ், ராகுல்நாத், சார் ஆட்சியர் கோகுல், மாநகராட்சிகளில் முதலிடம் பிடித்த ஈரோடு மாநகராட்சி ஆணையர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், ஆளுநரின்செயலர் கிர்லோஷ் குமார், பொதுத்துறைசெயலர் நந்தகுமார் பங்கேற்றனர்.