சென்னை: பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2.21 இலட்சம் விவசாயிகளுக்கு 318.30 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2021-2022 ஆம் ஆண்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட குளிர் பருவ (ரபி) பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக சுமார் 2.02 இலட்சம் விவசாயிகளுக்கு 284 கோடி ரூபாயும், 2022-2023 ஆம் ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் சுமார் 19,282 விவசாயிகளுக்கு 34.30 கோடி ரூபாயும், என மொத்தம் 2.21 இலட்சம் விவசாயிகளுக்கு 318.30 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக ஐந்து விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016-2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-2021ஆம் ஆண்டிலிருந்து இத்திட்டத்திற்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசு மானாவாரி மாவட்டங்களுக்கு 30 சதவீதம் வரையிலும், பாசன வசதி உள்ள மாவட்டங்களுக்கு 25 சதவீதம் வரை பங்களிப்பிலும், மாநில அரசின் 60 முதல் 65 சதவீத பங்களிப்பிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2021-2022ஆம் ஆண்டில் இத்திட்டம் 37 மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் இணை காப்பீட்டுத் திட்டமாக 80 : 20 விகிதத்தில் இடர் நிகழ்வுகளை (Risk) ஏற்றுக் கொண்டு. மாநில அரசுடன் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மற்றும் இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் இணைந்து செயல்படுத்தின. 2021-2022ஆம் ஆண்டு குளிர் பருவ (ரபி) பயிர்களுக்கான தமிழ்நாடு அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக 276.85 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் 152 கோடி ரூபாயும். இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் 132 கோடி ரூபாயும், என மொத்தம் 284 கோடி ரூபாய் தற்போது இழப்பீட்டுத் தொகையாக சுமார் 2.02 இலட்சம் விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 80,357 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர் பாதிப்படைந்தது. 2022-2023 ஆம் ஆண்டில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அறிவிக்கை செய்யப்பட்ட 277 வருவாய் கிராமங்களுள், 87 வருவாய் கிராமங்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில், சுமார் ஒரு மாதம் வயதுடைய சம்பா நெற்பயிர் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்தது. பயிர் காப்பீட்டுத் திட்ட விதிமுறைகளின்படி, 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் பாதிப்பு ஏற்பட்ட 87 வருவாய் கிராமங்கள் விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டு. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு செய்த நடப்பு ஆண்டிலேயே இழப்பீட்டுத் தொகை வழங்கிட ஏதுவாக, 39,142 ஏக்கர் சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8.762/- வீதம் சுமார் 19.282 விவசாயிகளுக்கு 34.30 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சுமார் 2.21 இலட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் 318.30 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இப்பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று ஐந்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது-