சென்னை: ரூ.72.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திறந்து வைத்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் மகளிர் / குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் ஏற்படுத்தப்பட்ட நிர்பயா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு (Integrated Command & Control Centre) மையத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகளிர் / குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசு, நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னை மாநகர் பேருந்துகளில் பயணிக்கும் மகளிர் / குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் சுமார் ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் 2,500 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தமாக 66 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று, தற்போது 2,330 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தமாக 63 இடங்களில் இத்திட்டமானது துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 14/05/2022 அன்று முதலமைச்சரால் 500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, இத்திட்டமானது பரிட்சார்த்த முறையில் முதற்கட்டமாக துவக்கி வைக்கப்பட்டது. மகளிர் / குழந்தைகளின் பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் இதுநாள் வரையில் பேருந்துகளிலிருந்து எவ்வித அழைப்பும் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இரண்டாம் கட்டமாக கூடுதலாக 1,830 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மொத்தமாக 2,330 பேருந்துகளில் இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 2,330 பேருந்துகளில், ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர், 3 கண்காணிப்பு கேமராக்கள், 4 அவசரகால பொத்தான்கள் மற்றும் ஒரு ஒலிபெருக்கியும் ஆக மொத்தம் 2,330 மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர், 6,990 கண்காணிப்பு கேமராக்கள், 9,320 அவசரகால பொத்தான்கள் மற்றும் 2,330 ஒலிபெருக்கிகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள பேருந்துகளில் பயணிக்கும் மகளிர் / குழந்தைகளின் பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில், ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பட்சத்தில், பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள அவசரகால பொத்தானை அழுத்துவதினால், பேருந்தில் உள்ள ஒலிபெருக்கி வாயிலாக ஒலி எழுப்பப்பட்டு ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

மேலும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையத்திற்கும் தானாகவே ஒரு நிமிட காணொலி காட்சி பதிவை உடனடியாக அனுப்புவதோடு, இப்பதிவு ஆய்வு செய்யப்பட்டு, அசம்பாவிதம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சென்னை பெருநகரக் காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையமானது 5000 சதுர அடியில் இரண்டு அடுக்கு தளம் கொண்ட கட்டிடம். மேலும், இந்த மையத்தில் 40 அடி நீளம் x 7 அடி உயரம்  கொண்ட காட்சித்திரையுடன் 16 கணணி இயக்குபவர்கள் அமர்ந்து கண்காணிக்கும் அறை மற்றும் கலந்தாய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால், மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.