சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதுபோல, தொகுதி மறுசீரமைப் பிற்கு எதிராகவும் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த இரு தீர்மானத்தையும் எதிர்த்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரைவையின் 2024ம்ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய 3வது நாள் அமர்வில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராகவும், தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராகவும் தனித்தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றினார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அதேசமயத்தில் மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தின் நோக்கமாகும். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அதேசமயத்தில் மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தின் நோக்கமாகும். இதனால் அரசுக்கான செலவுகள் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நம் இந்தியாவில் புதிது அல்ல. சில மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் சேர்த்தே நடத்தப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இவ்வாறு நடக்கும்போது பொதுமக்கள் 2 வாக்குகளை செலுத்த வேண்டும். மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை வலியுறுத்தி வருகிறது. இத்திட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகிறதுது. அதேசமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதை கடுமையாக எதிர்த்து வரும் திமுக, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தனித்தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இது, அதிகார பரவலுக்கு எதிரானது என்பதால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. இந்த திட்டம் மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்பு சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று. நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நாடு முழுவதும் நடத்த முடியாத சூழல் உள்ளது. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது இயலாத ஒன்றாகும்” என கூறினார்.
அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைந்து ஒன்றியத்தில் அமையும் ஆட்சி கவிழுமானால், அனைத்து மாநிலங்களையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? சில மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ந்து தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால், ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தானாக முன்வந்து பதவி விலகுவார்களா? இதைவிட காமெடி காமெடி கொள்கை இருக்க முடியுமா?
நாடாளுமன்ற தேர்தலைக் கூட ஒரே நாளில் இந்தியா முழுக்க நடத்துவதற்கு தயாராக இல்லாத சூழல்தான் இப்போது இருக்கிறது இந்த நிலையில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 30 மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவது மாயாஜாலமா?
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைபடுத்தக்கூடாது என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவிடம் திமுக ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் வலியுறுத்தினார்.
அதேபோல் 2026 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடத்தப்படும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனித்தீர்மானம் முன்மொழியப்பட்டது.
இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ” தொகுதி வரையறை என்ற பெயரில் எந்த காரணத்துக்காவும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. தொகுதி வரையறை என்ற பெயரில் எந்த காரணத்துக்காவும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. இது தென்னிந்திய மாநிலங்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உள்ளது. அதாவது, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், தற்போது உள்ள அதே விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை தொடரும் வகையில், சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்
இந்த 2 திட்டங்களும் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறைக்கு எதிரானது” என தெரிவித்தார்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், தொகுதி மறுசீரமைப்பால், தங்கள் பிரதிநிதித்துவ பலத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது .
இந்த தீர்மானங்களின் மீது எம்எல்ஏக்கள் விவாதம் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து, இந்த தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளன.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் நாளை பேச உள்ளார். விடுமுறைக்குப் பிறகு வரும் 19ஆம் தேதியன்று 2024-25 ஆம் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 20ஆம் தேதியன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
இதனிடையே 2 தனித்தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.