சென்னை: முதல்வர் ஸ்டாலின் கொரானாவிலிருந்து குணமடைந்து வருகிறார் என்றும், அவருக்கு மேலும் ஓய்வு தேவை என  காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சோர்வடைந்தால், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், ஸ்கேன் சோதனை செய்வதற்காக  நேற்று காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள், அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தினர். இதையடுத்து ஸ்டாலின் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,  முதல்வரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று மதியம் 12.30 மணி அளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முதல்வர் ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட சோதனைகள் முடிவடைந்து விட்டதாகவும், அவரது உடல்நிலை தேறி வருவதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்  முற்றிலுமாக கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து  சில நாட்கள்  ஒய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.