நாகை:  கள ஆய்வுக்காக நாகை சென்ற முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர்  உற்சாக வரவற்பு அளித்தனர். அங்கு திமுக  கட்சி அலுவலகம் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்,  39 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மு.க.ஸ்டாலின்.

நாகை அவுரி திடலில் 105 புதிய பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கள ஆய்வுக்கு மாவட்டம் தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும் மக்களுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அப்படி செல்லும் போது 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு தி.மு.க.வினரை தயார்படுத்தும் வகையில் கட்சி பணிகளையும் மேற்கொள்கிறார். ஆட்சிப்பணி, கட்சிப்பணி இரண்டையும் ஒருங்கே செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக நேற்று (மார்ச் 2) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். பிறகு அவர் திருச்சியில் இருந்து காரில் நாகை மாவட்டத்துக்கு சென்றார். நாகை மாவட்ட எல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அவர் அங்கு அரசு சுற்றுலா மாளிகையில் இரவில் தங்கி ஓய்வு எடுத்தார்.

இன்று (திங்கட்கிழமை) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதற்காக அவர் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். நாகை தம்பித்துரை பூங்காவில் இருந்து புத்தூர் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். சில இடங்களில் மக்கள் கூட்டத்தை கண்டதும்,   அவர் சாலையில் நடந்து சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டார். மக்களிடம் அவர் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

அதன்பிறகு நாகையில் நடந்த விழாவில் 38 ஆயிரத்து 956 பயனாளிகளுக்கு ரூ.200 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 700 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

105 பஸ் போக்குவரத்துகளையும் தொடங்கி வைத்தார்.

முன்னதாக நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் நாகையில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. கட்சி அலுவலகமான தளபதி அறிவாலயத்தையும் திறந்து வைத்தார்.