சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று இரவு டெல்லி செல்கிறார்.
தலைநகர் டெல்லியில் உள்ள தீன்தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில் திமுகவுக்கு அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயம் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கட்டிட திறப்பு விழா ஏப்ரல் 2ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
திமுக அலுவலக கட்டடிடம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட சில மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு நாளை நாளை (31.3.2022) பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்கிறார். அப்போது, டெல்லி அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் நேரடியாக அழைப்பு விடுக்கிறார்.
அதைத் தொடர்ந்து, நாளை மாலை மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து, ஏப்ரல் 1-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார்.