ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி மற்றும் 59ஆவது குரு பூஜை விழாவின்  இறுதி நாள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று மதுரை சென்ற முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், இன்று  தமிழக அரசின் சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர்  சிலை மற்றும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலைஅணிவித்து மரியாதை செய்துவிட்டு, பசும்பொன் நோக்கி பயணமானார்.

பசும்பொன்னில்  உள்ள பசும்பொன் தேவர் திருமகனார்  உருவசிலைக்குமாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறை யாக ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார்.

முதல்வருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தேவர் நினைவிடம் அருகேயுள்ள தேவர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் பார்வையிட்டார்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு இந்த பகுதி முழுவதும் 10,000திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.

கடந்த 27ஆம் தேதி தொடங்கிய இந்த குரு பூஜை விழா என்பது இன்றுடன் நிறைவடைகிறது.