சென்னை: வடகிழக்கு பருவமழை, மழை வெள்ள பாதிப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன்  முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். அதுபோல, மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வரும் மத்திய அரசின் குழுவினருடனும்  ஆலோசனை நடத்துகிறார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவரும் பரவலாக தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மேலும் கனமழை கொட்டியதால் ஏரி குளங்கள் நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், மீண்டும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து, ,கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்  இன்று காலை காணொலி காட்சி மூலமாக ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

அதைத்தொடர்ந்து,  மழை வெள்ளத்தை பார்வையிட வந்த மத்தியக் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து பேச உள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் குழு கடந்த 21 ஆம் தேதி சென்னை வந்தது. அவர்கள் 2  குழுக்களாக பிரிந்து கடந்த 22ம் தேதி சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, பகுதிகளிலும், 23-ஆம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் சென்று வெள்ளச் சேதங்களை கணக்கிட்டும், விவசாயிகளிடம் சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

இதையடுத்து இன்று முதல்வருடன் ஆலோசனை நடத்துகின்றனர்.