சென்னை: சாலைவிபத்து உயிரிழப்பை தடுக்கும் வகையில், ‘இன்னுயிர் காப்போம்’ என்ற மருத்துவ திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக்கல்லூரியான ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில், , இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில், சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை ஒதுக்கியும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விபத்துக்கு உள்ளானவரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூபாய் 5 ஆயிரம் ஊக்க தொகையும், விபத்தில் சிக்கியவருக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தில் 610 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு ஒள்ளன.

அதன்படி, இன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்க விழா இன்று  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து, அங்கு  48 மணி நேரம் செயல்படும் கட்டணமில்லா சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார்.