சென்னை: மேல்மருவத்தூர் செல்லும் வழியில், இன்று காலை கூடுவாஞ்சேரி தடுப்பூசி மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலி இன்று  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துக்கல்லுரி மற்றும் மருத்துவ மனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைக்கவும், அங்கு  48 மணி நேரம் செயல்படும் கட்டணமில்லா சிகிச்சை மையத்தை திறந்து வைப்பதற்கு சென்றார்.

போகும் வழியில்,  கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தடுப்பூசி போட வந்த பொதுமக்களிடம் சகஜமாக பேசி நலம் விசாரித்ததுடன்,  தடுப்பூசி எடுத்துக்கொண்ட  பெண் ஒருவரிடம், நீங்கள் எத்தனையாவது டோஸ் போடுகிறீர்கள்” என்று மு.க.ஸ்டாலின் கேட்டார். அதற்கு பதில் அளித்த அந்த பெண், 2-வது டோஸ் போடுவதாக கூறினார்.

இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்களிடம்,  அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என அறிவுறுத்தினார். முதல்வரின் இந்த திடீர் ஆய்வின்போது,  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, நேரு, பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கூடுவாஞ்சேரி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை, அம்மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக், கூடுவாஞ்சேரி பேரூர் செயலாளர் ஜி.கே.லோகநாதன், வி.ஜி.திருமலை, அருள்தேவி, ஊராட்சி மன்ற தலைவர் சத்யா, ஒன்றிய குழு உறுப்பினர் மோகனஜீவா உள்ளிட்ட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மு.க. ஸ்டாலினை வரவேற்றனர்.