சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் ரூ.14.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  இன்று திறந்து வைத்தார்.

கிண்டி கத்திப்பாரா ஜங்ஷன் சென்னையில் முக்கிய மையமாக திகழ்கிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள  மேம்பாலத்தின் இருந்து ஒரு வழி அண்ணாசாலைக்கும், மற்றொரு வழி, கோயம்பேடு பகுதிக்கும், மற்றொரு வழி போரூர், பூந்தமல்லி, இன்னொரு ஏர்போர்ட்  தாம்பரம் ஆகிய இடங்களுக்கு செல்கிறது. சென்னையின் நுழை வாயிலாக  அறியப்படும்  இங்கு அமைக்கப்பட்டுள்ள மேம்பாலமானது, ஆசியாவிலெயே மிகப்பெரிய குளோவர் இலை வடிவமைப்புடன் கூடிய மேம்பாலம் என்ற பெருமைக்குரியது. இந்த மேம்பாலத்திற்கு கீழே உள்ள பகுதிகள், தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்தன. அதை அப்புறப்படுத்திவிடடு, அந்த பகுதி யில் சென்னை 2.0 திட்டத்தின்படி, நகர்ப்புற சதுக்கம் அமைக்கும் பணியை தமிழகஅரசு மேற்கொண்டது.

இதற்காக ரூ.14.50 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. வண்ண  விளக்குகளும் பொருத்தப்பட்டு, ரம்மியமாக காட்சி தரும் கத்திபாரா நகர்புறச் சதுக்கம் பொதுமக்களை வெகுவாக கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தில் பேருந்து நிலையம்,  3 கி.மீ தூரத்திற்கு நடைபயிற்சி பாதை, சிறுவர் பூங்கா, உணவகம், வணிக வளாகம், பசுமைப் புல்வெளிகள் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன. மிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழ் உயிர் எழுத்துக்களுடன் கூடிய அலங்கார விளக்குகளும் இடம் பெற்றுள்ளன.  அத்துடன், 128 கார்கள் மற்றும் 340 இருசக்கர வானங்கள் நிறுத்த ஏதுவாக பார்க்கிங் வசதிகளும்,  8 பேருந்து நிறுத்தங்களும் உள்ளன.

இந்த சதுக்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.அதன் பின்னர்,பேட்டரி வாகனத்தில் ஏறி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதல்வர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து,கத்திப்பாரா சதுக்கத்தில் மரக்கன்றையும் முதல்வர் ஸ்டாலின் நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.