சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற (ஜூலை) 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 188 நாடுகள் பங்கேற்க இருப்பது தற்போது உறுதி ஆகி உள்ளது. இந்த நாடுகளை சேர்ந்த மொத்தம் 343 அணிகள் அதிகாரப்பூர்வ போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்து உள்ளன. இது தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாமல்லபுரம் உலக நாடுகளில் இருந்து வரும் வீரர்களை கவரும் வகையில் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தலைமைச்செயலகத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஒலிம்பியாட் தொடக்க விழா, விளம்பரம், வரவேற்பு, பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, விளையாட்டுத்துறை செயலாளர் அபூர்வா உள்பட பலர் பங்கேற்றனர்.