சென்னை: தமிழ்நாடு அரசு 2024ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது. அதற்கான லோகோ (சின்னம்) இன்று முதலமைச்சர் மு..க.ஸ்டாலினால் வெளியிடப்படுகிறது.

அரசு பொறுப்பேற்றதில் இருந்து திட்டமிட்ட தொழில் வளர்ச்சியை அடைவதற்காக, துறை சார்ந்த நிதி நுட்பக் கொள்கை, ஆராய்ச்சி – வளர்ச்சி கொள்கை, உயிரியல் கொள்கை, ஏற்றுமதி கொள்கை, வான்வெளி – பாதுகாப்பு கொள்கை, காலணி – தோல் கொள்கை, மின்சார வாகனங்கள் கொள்கை, தளவாடக் கொள்கை, நகர எரிவாயு வழங்கல் கொள்கை, எத்தனால் கொள்கை என 10 புதிய கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாசம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, பட்ஜெட்டில், சென்னையில் 2024 ஜன.10, 11-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில், திமுக அரசு பதவி ஏற்றபிறகு, கடந்த 2 ஆண்டுகளாக தொழில் துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருவதாகவும், 2021 மே மாதம் முதல் இதுவரை 3.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்மூலம் ரூ.2.70 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும்,. இந்த முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் 2024 ஜன.10, 11-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
தொழில்கள் செழிக்கும் தமிழகத்தின் தனிச் சிறப்புகளையும், முதலீட்டை ஈர்ப்பதற்கு உகந்த சூழலையும் எடுத்துக்காட்டும் தளமாக இந்த மாநாடு அமையும். மேலும், மாநிலத்தில் உள்ள பெருந்தொழில்கள், சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றை முதலீட்டாளர்களுடனும், உலகச் சந்தையுடனும் இணைக்க இது ஒரு வாய்ப்பாகவும் அமையும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்க வேண்டும் என்பது அரசின் குறிக்கோள். சமீபத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 85 தொழில் திட்டங்கள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம் ரூ.1.44 லட்சம் கோடி முதலீட்டில் 2.14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்என கூறப்பட்டது.
இந்த நிலையில், வரும் 2024 ஜனவரி 10,11ம் நாட்களில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கான சின்னத்தை ( Logo ) தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தொழில்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை சார்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.