சென்னை: திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, விமான நிலைய திறப்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று காலை 10 மணி அளவில் திருச்சி வரும் நிலையில், அவரை வரவேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சி சென்றார்.
பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி அவருக்கு ஆளுநர் ரவி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “ புண்ணிய பூமியான திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். அவர் விமானம், ரயில், சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, துறைமுகம் போன்ற பல முடிக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களைத் திறந்து வைக்கிறார். தமிழக மக்கள் மீது உங்களின் அபரிமிதமான அன்புக்கும் பாசத்திற்கும், மாநிலத்தின் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உங்கள் அர்ப்பணிப்புக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடயும் பிரதமர் மோடி, காரில் பயணித்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்கிறார். அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் 33 பேருக்கு பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து கார் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்து அங்கு கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பார்வையிட்டு, விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மேலும், 5 சாலைத் திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம் 2-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் திறக்கிறார்.
பல்வேறு அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழகம் வரும் பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.