சென்னை: திமுக இளைஞர் அணி செயலியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 22 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மகன் உதயநிதியை முதலமைச்சரும் திமுக தலைவருமான  ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.

 திமுக இளைஞர் அணி செயலியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திராவிட மாடல் பயிற்சி பாசறை 2-யும் தொடங்கி வைத்தார். உதயநிதிக்கு துணை நிற்க கூடியவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன் என்றவர், கட்சியின் தலைவனாக பெருமைப்படுகிறேன் என்றும்,  பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று புகழாரம் சூட்டியவர், உதயநிதி ஒரு செங்கல் பிரசாரம் மூலம் மக்கள் மனதில் பல விஷயங்களை பதிவு செய்தார், இந்தி திணிப்பு, நீட் தேர்வு பிரச்சினைகளை மக்கள் மனதில் பதிவு செய்தார் என்று பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய இளைஞர் அணி தலைவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  திமுக இளைஞரணிக்கு புதிதாக சுமார் 22 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம் என்றும்,  திராவிட பாசறை நிகழ்ச்சியின் மீது அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். இளைஞரணிக்கு நான் பதவியேற்று 3 வருடங்களில் ஸ்டாலின் பங்கேற்கும் முதல் திமுக இளைஞரணி நிகழ்ச்சி என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.