சென்னை: போகி பண்டிகையையொட்டி சென்னையில் எரிக்கப்பட்ட பொருட்களின் காரணமாக, காற்றின் தர குறியீடு 100-ஐ தாண்டி மோசமடைந்து உள்ளதாக  மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

போகி பண்டிகையின் காரணமாக எழுந்த புகையினால், காலை 10மணி வரை சாலைகள் புகைமூட்டங்களாகவே காணப்பட்டது. வாகன ஓட்டிகள் ஹெட்லைட்டை எரியவிட்டபடி பயணம் செய்தனர்.

போகி பண்டிகையையொட்டி, பழையன கழிதல் என்ற சம்பிரதாயப்படி,  சென்னையில் பல பகுதிகளில் அதிகாலை முதலே பழைய பொருட்களை மக்கள் எரித்து வருகின்றனர். இதனால் நகரின் பல்வேறு சாலைகளில் அடர்ந்த புகை மூட்டம் காணப்பட்டது.   முக்கிய சாலைகளில் புகை மூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முன்விளக்கு எரியவிட்டபடி பயணம் செய்தனர்.

சென்னையில் போகி பண்டிகையின்போது, தேவையற்ற பொருட்களை எரிக்க வேண்டாம், மாநகர கும்ப சேகரிப்போரிடம் கொடுத்து விடும்படி மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது. இதனால் பலர் போகிக்கு எரிக்க வேண்டிய பொருட்களை அவர்களிடம் கொடுத்தனர். இதனால்,  இந்த ஆண்டு போகியின்போது டயர் போன்ற பொருட்கள் எரிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் பாரம்பரிய முறைப்படி பலர் வீடு முன்பு கொஞ்ச அளவில் பழைய பொருட்களை எரித்து போகியை வரவேற்றனர்.

இந்த நிலையில், சென்னையின் பல பகுதிகளில் காற்றின் தர குறியீடு நூறைத் தாண்டி உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே வடசென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு மற்றும் மணலியில் செயல்படும் ஆலைகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை காரணமாக, அதிக அளவில் மாசு ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய   போகிப்பண்டிகையால் காற்றின் தரம் மோசமடையத் தொடங்கியுள்ளது என  மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் தெரிவித்து உள்ளன.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத் தரவுகளின்படி மணலி, ஆலந்தூர், கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் மோசமடைந்துள்ளது எனவும், இன்னும் சில மணி நேரங்களில் மோசமான நிலையை எட்டக்கூடும் எனவும் தெரிவித்துஉள்ளது. காலை 6 மணிநேரம் நிலவரப்படி காற்று மாசு அளவு ஆலந்தூரில் 155,  பெருங்குடி 113 , கொடுங்கையூர் 94,  மணலி 87 , அரும்பாக்கம் 86 , வேளச்சேரி 84 , ராயபுரம் 82 என காற்றின் மாசு அதிகரித்துள்ளது.  இதன் காரணமாக பிளாஸ்டிக் டயர்களை எரிப்பதை தவிர்க்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ‘போகி’ பண்டிகை – சிறுவர்கள் உற்சாகம்…