சென்னை: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை கல்லூரி சாலையில் அமைந்துள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட உள்ள அன்பழகனின் சிலையை தயாரிப்பு பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து, டிபிஐ வளாகத்துக்கு அவரது பிறந்த நாளில் பெயர் மாற்றப்பட்டு, அதற்கான கல்வெட்டுக்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில், டிபிஐ வளாகத்தில் வைக்கப்பட உள்ள பேராசிரியர் அன்பழகனின் 8.5 அடி உயர முழு உருவ வெண்கல சிலை தயாரிப்பு பணியில் முதற்கட்டமாக களிமண் மாதிரி சிலை தயாராகி உள்ளது. மீஞ்சூர் அருகே புதுப்பேடு பகுதியில் சிற்ப கூடத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இங்கு இன்று சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மாதிரி சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்கள் எழுதிய திராவிடமும் சமூக மாற்றமும் என்கிற புத்தகத்தையும், பத்திரிக்கையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் அவர்கள் எழுதிய கலைஞர் மு.கருணாநி்தி வரலாறு என்கிற புத்தகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.