சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில்,  சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதனால் அவ்வப்போது, சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதுபோல அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழையும் தொடங்க உள்ளது. இந்த காலக்கட்டமே தமிழ்நாட்டிற்கு உரிய பருவமழை காலமாகும். இதனால், சென்னையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி,  பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்காமல் கடலுக்கு செல்லும் வகையில் சென்னையில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த  பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். முதல்வருடன் அமைச்சர்கள், மாநகர மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பக்கிங்ஹாம் கால்வாயில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 624 கி.மீ., நீள மழைநீர் வடிகால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை, ஓட்டேரி நல்லா, கொடுங்கையூர் கால்வாய், விருகம் பாக்கம் கால்வாய் மற்றும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் மாநகரில் பெய்யும் மழைநீரை வடிய செய்வதில் இந்த மழைநீர் வடிகால்களும், கால்வாய்களும் முக்கிய பங்காற்றுகின்றன.

சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த மழைநீர் வடிகால்களை ஒட்டி, 73 ஆயிரத்து 500 வண்டல் வடிகட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளும் தூர்வாரப்படுகின்றன. இந்தப் பணிகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் மாநகராட்சி சார்பில் 33 கால்வாய்கள் 53.42 கி.மீ., நீளத்துக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அனைத்திலும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தலா 2 பெரிய ஆம்பிபியன், சிறிய ஆம்பிபியன் இயந்திரங்கள், 4 ரோபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகளை அக்டோபர் மாதத்துத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.