சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொளி மூலம் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் திறந்து வைத்தார். கீழடியில் ரூ.24.30 கோடி செலவில் நான்கரை ஏக்கரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறைகள் இணைந்து பல கட்டங்களாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த அகழாய்வுகளில் பண்டைய தமிழர்களின் குடியிருப்புகள், கட்டிட அமைப்புகள், கருவிகள், மண்பாண்டங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல முக்கிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் பண்டைய தமிழர்களின் வாழ்வியல், கலாச்சாரம், தொழில், வியாபாரம், கட்டிடக்கலை போன்றவை உலகுக்கு தெரியவந்துள்ளது.
அதன்படி, தமிழர் நாகரிகம் மிகப் பழமையானதும், முன்னேறிய நகர்ப்புற வாழ்க்கை முறையுடனும் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதன் முக்கியத்துவத்தை பாதுகாத்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக அந்த பகுதியில் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த இடத்தை திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்ற ரூ. 17 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கு அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. பின்னர் இதறகான கட்டுமான மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததால் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டு தற்போது மொத்த செலவு ரூ. 22 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு சுமார் 67,343 சதுர மீட்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த திறந்தவெளி அருங்காட்சியக வளாகம் இரண்டு முக்கிய அரங்குகளாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏழாம் கட்ட அகழாய்வு நடைபெற்ற பகுதி முதலாம் அரங்காக மாற்றப்பட்டு உள்ளது. அதே போல் இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வு நடைபெற்ற பகுதிகள் இரண்டாம் அரங்காக உருவாக்கப்பட்டு உள்ளன.
தற்போது முதலாம் அரங்கு முழுமையாக பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பார்வைக்கு தயாராகி உள்ளது. இரண்டாம் அரங்கின் பணிகளும் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இநத அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த திறந்தவெளி அருங்காட்சியகத்தின் மூலம் பண்டைய தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்தனர், அவர்கள் பயன்படுத்திய வீட்டு உபகரணங்கள், தொழில்நுட்ப அறிவு, நகரமைப்பு திறன், கழிவுநீர் வடிகால் அமைப்புகள் போன்ற பல அம்சங்களை மக்கள் நேரடியாக கண்டு அறிந்து கொள்ள முடியும். அகழாய்வு செய்யப்பட்ட இடங்களின் இயல்பை காக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள இந்த அருங்காட்சியகம், தமிழர் நாகரிக வரலாற்றை உயிர்ப்பிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இது மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்றில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு மிகப் பெரிய பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழடியின் தொன்மை மற்றும் தமிழர் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் முக்கிய மையமாக இந்த அருங்காட்சியகம் அமையும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே இவ்வகையான திறந்தவெளி அருங்காட்சியகம் முதன்முறையாக கீழடியில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.