சென்னை: மாநில தலைநகர் சென்னையில் ரூ.286.81 கோடி செலவில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 1632 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை, கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ. 186.51 கோடி செலவில்  1036 காவலர் குடியிருப்புககள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். இதேபோல் சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ. 100.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

.சென்னை, கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் 2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான ரூ. 3 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா.விசுவநாதன் வழங்கினார்.

புதிய குடியிருப்புகளை திறந்து வைத்த பின்னர் 5 காவலர்களின் குடும்பத்தினருக்கு குடியிருப்புக்கான சாவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து அங்கு வசிக்கும்  காவலர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, உள்துறை சார்பில் ரூ. 36.52 கோடி செலவில் 32 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள் 2 காவல் துறை கட்டடங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 11 குடியிருப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணியாளர்களுக்கான 80 குடியிருப்புகள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் மற்றும் 1 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கான பாசறை, ரூ. 55.19 கோடி செலவில் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 253 வீடுகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.