பொள்ளாச்சி:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈச்சனாரியில் ரூ.589.24 கோடி மதிப்பீட்டில் 1.07 இலட்ச பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  லட்சக்கணக்கானோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்வதே திமுக அரசின் சாதனை என கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3நாள் பயணமாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சென்றுள்ளார்.  இந்த பயணத்தின்போது,  பல்வேறு முடிவுற்ற அரசுத் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதோடு, பல கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார். இதற்காக  நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, இன்று  (24.08.2022) காலை 10 மணிக்கு கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டார். பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகள், குறைகளை கேட்டறிந்தார் அங்கு சுமார் ஒரு லட்சத்து ஏழாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈச்சனாரியில் ரூ.589.24 கோடி மதிப்பீட்டில் 1.07 லட்ச பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களது தேவைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு  நடைபெற்ற அரசு விழாவில்,பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

முன்னதாக ஈச்சனாரி செல்லும் வழியில் நிர்மலா கல்லூரி மாணவிகள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் உரையாடினார்.

அதைத்தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு பெள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் நடக்கும் கட்சி விழாவில் கலந்துக்கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டில் அதிமுக, பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையவுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  லட்சக்கணக்கானோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்வதே திமுக அரசின் சாதனை என கூறினார்.

கோவையில் ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.271 கோடி மதிப்பில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு 5வது முறையாக வந்துள்ளேன். கோவை மாவட்டம் மீதும், கோவை மக்கள் மீதும் நான் வைத்துள்ள அன்பின் அடையாளமே வருகைக்கு காரணம். தனக்கென ஒரு இலக்கை அமைத்து அதை செயல்படுத்தி வருபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி என்றார்.

கோவை என்றாலே பிரம்மாண்டம்தான். தென்னிந்தியாவின் முக்கியமான தொழில் நகரம் கோவை. கோவையில் பெருந்தொழில்கள் மட்டுமல்ல; சிறு, குறு தொழில்களும் அதிகளவில் உள்ளன. கோவையில் கடந்த நவம்பர் 22ம் தேதி நடந்த அரசு விழாவில் ரூ.89.73 கோடி மதிப்பில் 128 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அரசு விழா போல் இல்லமால் மாநாடு போல் நடந்து கொண்டிருக்கிறது.

எதிர்ப்பு, அடக்குமுறைகளை மீறி விமர்சனத்தில் வளர்ந்து வந்தவன் நான். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன். சொந்த கட்சியில் உள்ள குளறுபடிகளை மறைக்க திமுக ஆட்சி மீது விமர்சனம் செய்கின்றனர். ஓராண்டு காலத்தில் ஓராயிரம் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். குடிநீர் மற்றும் நீராதாரத்தை மேம்படுத்தக்கூடிய உட்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும். வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்கான பணிகள், இணைப்பு பாலங்கள், சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். மருத்துவ வசதிகள், பள்ளி மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள், ஐடிஐ கல்வி நிலையங்கள் அமைக்கப்படும்.

தன்மானம் இல்லாத இனமானம் இல்லாத கூட்டம் தான் திராவிட மாடல் ஆட்சியை விமர்சித்து வருகிறது. தன்மானம், இனமானம் பற்றி கவலைப்படாதவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்காக ரூ.1810 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டம், கோவை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய திட்டம். கோவை மாவட்டத்துக்கு ஓராண்டியில் திமுக அரசு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் உரையாற்றினார். சிறுவாணி அணையில் இருந்து நீர் திறக்க கேரள முதல்வரிடம் கோரினேன், உடனே நீர் திறந்துவிடப்பட்டது.

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருகிறது. அனைவருக்குமான ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கானோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்வதே திமுக அரசின் சாதனை. மக்களுக்காக திமுக அரசு இருக்கிறது என்பதை தெளிவாக அறியலாம். கணக்கில்லாமல் நலத்திட்ட உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒளி தரக்கூடிய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியினருக்கான ஆட்சி  நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.