சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு உள்பட உயர்அதிகாரிளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில், போதைப்பொருட்கள் நடமாட்டம் உள்பட பல்வேறு குற்றவழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளும் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று முற்பகல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும், பல்வேறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காணொலி காட்சி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், சட்டம் – ஒழுங்கு பிரச்னையை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும், கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை, போக்சோ வழக்குகளின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும், இணையதள வழி குற்றச்செயல்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது, போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
மாதந்தோறும் தலைமை செயலாளர் தலைமையில் சட்டம் – ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆலோசனை கூட்டம் நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.