சென்னை: சென்னையில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ‘நீட் விலக்கு – நம் இலக்கு’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) தொடக்கிவைத்தார். திமுக இளைஞரணி, மருத்துவரணி, மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இன்று நடைபெற்ற சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில்  முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்பட பலர் கலந்துகொண்டானர்.

இதைத்தொடர்ந்து  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பிலான மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கவுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், பின்னர் சிறப்புரை ஆற்றினார். அப்போது,

 சென்னை கலைவாணர் அரங்கில், மருத்துவ அணி – மாணவர் அணி நிர்வாகிகளுடன் நாம் தொடங்கி வைக்கவுள்ளோம். நீட் ஒழிப்புக்கான இந்த முன்னெடுப்பு, கழக மாவட்டங்கள்தோறும் ஒரே நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்வுகளில், பொதுமக்கள் – பெற்றோர்கள் – மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்று கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் – நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் காப்பதற்காக இடப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.