சென்னை: கள ஆய்வில் முதலமைச்சர்  திட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக, மார்ச் 5,6 தேதிகளில் மதுரை உள்பட 5 மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

“மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்” என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள். மேலும், கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளார்கள். அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் முதலகட்டமாக,  வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, முறையாக பதில் தெரிவிக்காத மாவட்ட ஆட்சியர்கள் காவல் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து 2வது கட்டமாக, சேலம் உள்பட 4 மாவட்டங்களுக்கு நேரில் சென்று களஆய்வு நடத்தினார். தற்போது 3வது கட்டமாக, மார்ச் 5, மற்றும் 6 தேதிகளில் மதுரை உள்பட 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதன்படி,   மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை , தேனி மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும், பல்வேறு இடங்களில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேரடி கள ஆய்வு செய்ய உள்ளார்.