நாகர்கோவில்: தமிழ்நாட்டில் கோவில்களுக்கு சொந்தமான ரூ.4000 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இங்கு நடைபெறும் மாசி கொடை விழா பிரசித்தி பெற்றது. 10நாட்கள் நடைபெறும், இத்திருவிழாவானது மார்ச் 5-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.  தொடர்ந்து மார்ச் 15-ந்தேதி வரை நடக்கிறது.

மாசி திருவிழாவையொட்டி, அங்கு ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த மாநாட்டுக்கு தடை விதித்துள்ள தமிழ்நாடு அரசு, இந்த மாநாடு  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.  இதற்கு அந்த பகுதி மக்களும்,  இந்து அமைப்புகளு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அறநிலையத்துறை சார்பில் திருவிழா அழைப்பிதழ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இது போல் ஹைந்தவ சேவசங்கம் சார்பிலும் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரச்சனை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை குமரி மாவட்டம் வந்தார். பின்னர் அவர் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்று வரும் திருபணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். சமய மாநாடு நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு இந்த இடம் யாருக்கு சொந்தமான இடம் என்பது குறித்து விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது, மாநாடு நடைபெறும் இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என தெரிவித்தனர். அதற்கான ஆவணங்களையும் எடுத்து காண்பித்தனர். பின்னர் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர் பாபு ஆலோசனை மேற்கொண்டார்.

 ஆய்வின் போது இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த நிலையில், அங்கு வந்த முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்னார், அமைச்சர் சேகர்பாபுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்து சமய மாநாடு நடத்த ஐந்தவ சேவா சங்கம் திட்டம் மாநாடு நடத்த அறநிலையத்துறை தடை விதித்துள்ளது குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான ரூ.4000 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.