சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தனது முதல் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை, எடப்பாடியில் இருந்து தொடங்குகிறார். இதை அவரே தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே தீவிரமான பிரசாரங்களை தொடங்கிவிட்ட நிலையில், அதிமுகவில் இதுவரை பிரசாரம் ஏதும் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை முதல் 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். நாளை முதலில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட, சமீபத்தில் கும்பாபிசேகம் நடைபெற்ற பெரிய சோரகை பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
முதல்வரின் தேர்தல் பிரசாரத்திற்கு வசதியாக, பிரத்யேக பிரசார வாகனம் எடப்பாடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வாகனம் மூலம், நாளை, எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீரங்கனூர், இருப்பாளி, வேலநாயக்கன்பாளையம், ஆலச்சிபாளையம், எட்டி குட்டைமேடு ஆகிய இடங்களில் மினி கிளினிக்கை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். த னது சொந்த ஊரான சிலுவம்பாளையம் செல்லும் அவர் அங்கு ஒரு மினி கிளினிக்கை திறந்து வைக்கிறார்.
பின்னர், மாலை, எடப்பாடியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வரும் அவர் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.