கோவை: தமிழகத்திலிருந்து புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு நடப்பு ஆண்டில்  ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை தொண்டாமுத்தூரில் உள்ள கிறுஸ்துவ தேவாலயத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கிறிஸ்துவ மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போதும் கிறிஸ்தவ மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அதேபோல் தற்போதைய முதல்வரும் சிறுபான்மையினருக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி இதுவரை  ரூ.8.1 கோடி நிதி பெற்று, 4000க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் பயணம் சென்றுள்ளனர். 2020- 21ம் ஆண்டுகளில் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்துவர்களுக்கு தமிழக முதல்வர் ஒரு கோடியே 70 லட்சம் நிதி அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆதரவற்ற கிறிஸ்துவ பெண்களுக்கான நலச்சங்கம் இயங்கி வருகிறது. இந்தச் சங்கங்கள் பெரும் நிதியில் 2 மடங்காக மானியம் வழங்கப்படுகிறது. மேலும், ஆதரவற்ற பெண்களுக்கு ஆதார நிதியாக தலா 1  லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தையல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்று கூறினார்.