சென்னை: மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தும்முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில்ஆய்வு நடத்துகிறார். அதைத்தொடர்ந்து நாளை மறுதினம் (நவம்பர் 11ந்தேதி)    தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் ஆய்வு நடத்துகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டங்கள்தோறும் நேரடி கள ஆய்வு செய்து வருகிறார். அப்போது,  விவசாய சங்க பிரதிநிதிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பினர், மகளிர் சுயஉதவி குழுவினரையும் சந்தித்து தங்களது குறைகளை கேட்கிறார். அத்துடன் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதுவரை 27 மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு நடத்தியுள்ளார். இந்த நிலையில் நாளை பிற்பகல் 3 மணி அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்குகிறார்.

அதையடுத்து, நாளை மறுநாள் (11–ந் தேதி) காலை 10 மணிக்கு தூத்துக்குடியிலும், பிற்பகல் 3 மணிக்கு விருதுநகரிலும் முதலமைச்சர் ஆய்வு நடத்துகிறார்.