சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சை கட்டண விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். மேலும் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.