டெல்லி: லகிம்பூர்கேரி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை தலைமை நீதிபதி சந்தித்தாக பிரபல ஊடகம் பொய்செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது கேள்வி எழுப்பப்பட்டதால், பொய்ச்செய்தி வெளியிட்ட ஊடகம், தவறுதாக செய்தி வெளியிடப்பட்டு விட்டதாக மன்னிப்பு கோரியுள்ளது. இதனால் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலத்தில், லகிம்பூர் கேரி பகுதியில் கடந்த 3-ந் தேதி நடைபெற இருந்த அரசு விழா ஒன்றுக்கு, துணை முதல்-மந்திரி கேசவ் மவுரியா, மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி அஜய் மிஸ்ரா ஆகியோர் செல்வதாக இருந்தது. அவர்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தி வந்தனர். சாலையின் இருபுறமும் அவர்கள் கருப்புக்கொடியுடன் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த எஸ்யுவி கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே 2 விவசாயிகள் உயிரிழந்த தாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த விவசாயகள் அடுத்து வந்தபாஜகவினரை தாக்கியதுடன், அவர்களின் கார்களையும் தீ வைத்து எரித்தனர். இதையடுத்து எழுந்த வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள் 4 பாஜகவினர், பத்திரிகையாளர் ஒருவர் என மொத்தம் 9 பேர் பலியாகினர்.
விவசாயிகள் மீது காரை மோதியவர், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் என கூறப்படுகிறது. வன்முறையைத் தொடர்ந்து. லகிம்பூர் கெரி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், வன்முறையில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். பின்னர் பிரியங்கா, ராகுல் உள்பட பஞ்சாப், சத்திஸ்கர் மாநில முதல்வர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையில், லகிம்பூர்கேரி வன்முறை குறித்து உச்சநீதிமன்றம் தானாகவே சூமோட்டோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தலைமைநீதிபதி ரமணா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. நேற்றை விசாரணையின்போது, உ.பி. அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், உடனே குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் 2வது நாளை விசாரணை இன்று நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில், பிரபல ஊடகமான டைம்ஸ் நவ், தலைமை நீதிபதி என்.வி.ரமணா குறித்து தவறான தகவலை வெளியிட்டது. தலைமைநீதிபதி ரமணா, லகிம்பூர் கேரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் உறவினர்களை சந்தித்ததாக செய்தி வெளியிட்டது.
இது இன்றைய லகிம்பூர்கேரி வன்முறை குறித்த விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் எதிரொலித்தது. வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியிடம், டைம்ஸ் நவ் செய்தி ஊடகம் வெளியிட்ட தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, ஊடகத்துறையினர், இதுபோன்ற அவதூறு தகவல்களை பரப்புவதால்தான், ஊடகத்துறையினர் மீதான நன்மதிப்பு பாழாகிறது.
நான் இங்கே வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போது, நான் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசியதாக கூறவது அபத்தமானது என்றார்.
இதையடுத்து, வழக்கறிஞர்கள் பொய்செய்தி ஒளிபரப்பிய டைம்ஸ் நவ் ஊடகம்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால், அதை ஏற்க மறுத்த தலைமைநீதிபதி என்.வி.ரமணா, ஊடகத்துறையினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் அன்று அறிவுறுத்தியதுடன், விசாரணையை தொடர்ந்தார்.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, டைம்ஸ் நவ் ஊடகம், தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரி யுள்ளது. அந்த டிவிட் தவறுதாக ஒளிபரப்பு செய்யப்பட்டு விட்டதாகவும், அதை உடனே நீக்கிவிட்டதாகதெரிவித்துள்ளதுடன், தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.