கடலூர்: உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெறுவதையொட்டி, ஜனவரி 13ந்தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம் ஜனவரி 4ந்தேதி தொடங்குகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு சிதம்பரம் ஞானப்பிரகாச குளத்தில் தெப்போற்சவமும் நடைபெற உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழியில் ஆருத்ரா, ஆனியில் ஆனி திருமஞ்சனம் என, ஆண்டுக்கு இரு முறை தரிசன விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா, வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன்படி, காலை 6:15 மணி முதல் 7:00 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகள், ஜனவரி 11ம் தேதி முதல் தொடங்குகிறது. அன்றைய தினம், தங்க ரதத்தில் பிஷாடன மூர்த்தி வீதியுலா நடக்கிறது.
ஜனவரி 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 5:00 மணிக்கு நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் எழுந்தருளி வீதியுலா வருவர்.
13ம் தேதி அதிகாலை 2:00 மணி முதல் 6:00 வரை, ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து திருவாபரண அலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலா காட்சியும், சித்சபையில் விஷேக ரகசிய பூஜையும் நடைபெறும்.
மாலை 3:00 மணிக்கு மேல், நடராஜரும், அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன விழா நடக்கிறது. இதுவே ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது.
தரிசன நிறைவு நாளன்று (ஜனவரி 15ந்தேதி), கனகசபை நகரில் உள்ள ஞானப்பிரகாச குளத்தில் தெற்போற்சவம் நடைபெறும். கடந்த 30 ஆண்டுகளாக தெப்போற்சவம் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெறுகிறது.

சிதம்பரத்தில் உள்ள ஞானப்பிரகாச குளம், கடந்த பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால், கடந்த 30 ஆண்டுகளாக அங்கு தெப்போற்சவம் நடத்தப்படவில்லை. இதுகுறித்து அம்மாவட்ட அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதையடுத்து, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு, சிதம்பரத்தில் உள்ள குளங்களை சீரமைக்க ரூ. 15 கோடி நிதி ஒதுக்கினார். அந்த நிதியில், ரூ. 3 கோடி செலவில் ஞானப்பிரகாச குளத்தை துார்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டு, சுற்றிலும் மின்விளக்குகளுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது.
குளத்தின் நடுவில், இடிந்த நிலையில் இருந்த நீராழி மண்டபம், நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் புதிதாக கட்டப்பட்டது. சமீபத்தில் பெய்து வந்த மழை காரணமாக, ஞானப்பிரகாச குளம் நிரம்பி, ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இதையொட்டி, இந்த ஆண்டு மார்கழி ஆருத்ர தரிசன விழா நாளை (4ம் தேதி) துவங்க உள்ள நிலையில், நிறைவு நாளான 15ம் தேதி, 30 ஆண்டுகளுக்கு பிறகு, ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்போற்சவம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13 அன்று கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு, இநத நிகழ்ச்சியையொட்டி, பொங்கல் விடுமுறையும் சேர்ந்து வருவதால் தொடர்ந்து 6 நாட்கள் அம்மாவட்ட மக்களுக்கு விடுமுறையாகி உள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 01-02-2025 சனிக்கிழமை அன்று வேலை நாள் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.
[youtube-feed feed=1]